சிங்கப்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் நேற்று பிஎஸ்ஐ-எஸ்ஏ வங்கியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தனர்.
1 எம்டிபி நிறுவனத்திற்கும், ஜோ லோவுக்கும் தனியார் வங்கி ஆலோசகராகச் செயல்பட்ட யாக் யூ சீ மீது, போலி ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மற்றொரு வங்கியாளரான யுவோன் சியா யூ ஃபூங் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இருவருக்கும் தலா 35,000 சிங்கப்பூர் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நடைபெறும்போது மேலும் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டால் பல விவகாரங்கள் மூடி மறைக்கப்பட்டு விடும்.
ஆனால், அவர்கள் இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினால், அதன்பிறகு நடைபெறும் வழக்கு விசாரணைகளில் 1 எம்டிபி குறித்த பல விவகாரங்கள் வெளிவரும் என்றும் இதனால், பிரதமர் நஜிப்புக்கு மேலும் நெருக்குதல்கள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.