சென்னை – முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் பல்வேறு போராட்டங்களுக்கிடையில், ஐந்து முறை தமிழக முதல்வர்கள் ஆனார்கள் என்றால், எந்தவித முயற்சியும் இன்றி, விசுவாசம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் ஒருவர் தமிழக முதல்வராக முடியுமா?
முடியும் என நிரூபித்திருக்கின்றார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவுக்குப் பதிலாக, இடைக்கால முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்பது இது மூன்றாவது முறை.
ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவுக்கு ஏதாவது நேர்ந்து அவர் தனது பதவியை விட்டு விலகி நிற்க வேண்டிய கட்டாயம் வரும்போது, ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடிப்பவராக – அதிமுகவினர் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும் மனிதராகத் திகழ்கின்றார் ஓபிஎஸ்.
அவர் திறமையானவரா, ஜெயலலிதாவுக்கு நிகராக மொழித் திறனும், அறிவாற்றலும் கொண்டவரா என்றால் இல்லை.
ஆனால், அவர் மனம் முழுக்க நிறைந்திருப்பது விசுவாசம் ஒன்றுதான். ஏற்கனவே, இரண்டு முறை அம்மாவின் சொல்படி நடந்து, ஆட்சி நடத்தி, பின்னர் அவர் திரும்பி வந்ததும், பவ்யமாக முதல்வர் பதவியை மீண்டும் திரும்ப ஒப்படைக்கும் விசுவாசம் அவரிடம் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றது.
இரண்டு முறை தனது விசுவாசத்துடன் கூடிய செயல் திறனை நிரூபித்துள்ள காரணத்தால்தான், தனக்கு ஏதாவது நேரும்போது, ஜெயலலிதா தனது கவனத்தை திருப்புவது ஓபிஎஸ் நோக்கித்தான்.
அந்த வகையில், தமிழக முதல்வராக ஆவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தாலும், மூன்று முறை அவரது கையைப் பிடித்து அழைத்து வந்து முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் அதிர்ஷ்டம் அவருக்கு நேர்ந்து கொண்டிருக்கின்றது.
வாழ்த்துகள்!
-இரா.முத்தரசன்