Home Featured கலையுலகம் “கெட்ட பழக்கங்களை விட்டுவிடு என்றார்; நான் கேட்கவில்லை” சிவகுமாரின் 75-வது பிறந்த நாளில் ரஜினி உருக்கமான...

“கெட்ட பழக்கங்களை விட்டுவிடு என்றார்; நான் கேட்கவில்லை” சிவகுமாரின் 75-வது பிறந்த நாளில் ரஜினி உருக்கமான வாழ்த்துக் கடிதம்!

903
0
SHARE
Ad

rajinikanth-sivakumar

சென்னை – தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன் சிவகுமார், ஒழுக்கம், நேர்மை, முறையான யோகா, நடைப்பயிற்சி மூலம் உடற்கட்டைப் பேணுதல் போன்ற அம்சங்களில் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர்.

நடிப்பு வாய்ப்புகள் குறைந்த வேளையில், தனது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும், முன்னணிக் கதாநாயகர்களாகத் தலையெடுத்த காலகட்டத்தில், சற்றே திரையுலகில் இருந்து ஒதுங்கி, தனது நினைவாற்றலை எடுத்துக் காட்டும் வண்ணம், இராமாயணம், மகாபாரதம், போன்ற காவியங்கள் குறித்து மணிக்கணக்கில் மனப்பாடமாக மேடைகளில் முழங்கியவர்.

#TamilSchoolmychoice

sivakumar-actor

சிறந்த ஓவியரும்கூட! அவரது வாழ்க்கை தொடங்கியதே, ஓவியக் கல்லூரி மாணவராகவும், ஓவியராகவும்தான்!

தனது ஒழுக்க வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக, இன்றும் இளமையாக இருக்கும் அவர் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தனது 75வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கின்றார்.

ரஜினிகாந்த் வாழ்த்துக் கடிதம்

சிவகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு உருக்கமான வாழ்த்துக் கடிதம் ஒன்றை வரைந்துள்ளார் ரஜினிகாந்த். சிவகுமாருடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான் – “புவனா ஒரு கேள்விக் குறி”, “கவிக்குயில்” – எனக் குறிப்பிட்டுள்ள அவர், நல்ல பழக்க வழக்கங்கள் பலவற்றை சிவகுமாரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

rajinikanth-rm-veerappan-s-90th-birthday-celebrations_144185839380

“அந்தக் காலத்தில் நான் புகை, மதுவுக்கு அடிமையாக இருந்த நேரம். சிவகுமார் ஒவ்வொரு நாளும் என்னைப் பார்த்து “இந்த பழக்கங்களை விட்டுவிடு ரஜினி. நீ பெரிய நடிகனா வருவே. இந்த கெட்ட பழக்கங்களால் உன் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே” என்று கூறுவார். “என்னடா இந்த ஆளு நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டேங்கிறாரு” என்று எனக்கு சில சமயங்களில் சலிப்பாயிருக்கும்” என்று ரஜினி தனது கடிதத்தில் மனம் திறந்து கொட்டியிருக்கின்றார்.

“என்மேல அவருக்கு அந்த அளவுக்கு அன்பு, பாசம், நம்பிக்கை. அவர் நல்ல மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர், ஒழுக்கமானவர் நேர்மையானவர், ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். இதுபோன்ற மனிதர்கள் சொல்வதெல்லாம் பலிக்காமல் இருக்காது. அவர் சொன்னது பலித்தது. நான் பெரிய நடிகனும் ஆனேன். அதே சமயம் அவர் பேச்சை கேட்காததினால் என்னுடைய உடம்பைக் கெடுத்துக் கொண்டேன்” என்றும் ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“இன்னைக்கும் அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை. அவர் சொல்றபடி நடந்துகிட்டா ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். இந்த மாபெரும் கலைஞன், மனிதன், நீடூழி வாழ்கவென்று ஆண்டவனை வேண்டி அவருடைய 75-வது பிறந்த நாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்” என சிவகுமாரை வாழ்த்தியுள்ளார் ரஜினி.

rajini-letter-sivakumar-75-birthday

ரஜினி சிவகுமாருக்கு வரைந்த கடிதத்தின் ஒரு பகுதி…