கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான் (படம்), புதிதாக அமைக்கப்பட்டுள்ள பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியில் தீவிரமாக இயங்கி வந்தவர். ஆனால், அந்தக் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப்பை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்த கைருடினின் பதவி விலகல், பெர்சாத்து கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தான் ஒரு சாதாரண உறுப்பினர்தான் என்பதால், தனது விலகலால் பெர்சாத்து கட்சிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும், கட்சிக்கு வெளியிலிருந்து தனது போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் கைருடின் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பெர்சாத்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்குகள் மீது கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
துன் மகாதீர் மீதான தனது விசுவாசம் இன்னும் தொடர்வதாகவும் கைருடின் கூறியுள்ளார். டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் கைருடின் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.