Home நாடு யுனேஸ்வரன்: “பெர்சாத்துவின் திடீர் தேர்தல் பேச்சு – உட்கட்சிப் பிளவுகளைத் திசை திருப்பும் முயற்சி”

யுனேஸ்வரன்: “பெர்சாத்துவின் திடீர் தேர்தல் பேச்சு – உட்கட்சிப் பிளவுகளைத் திசை திருப்பும் முயற்சி”

127
0
SHARE
Ad
ஆர்.யுனேஸ்வரன்

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் திடீர் தேர்தல் பேச்சு அந்தக் கட்சியின் உள் பிளவுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சி என பிகேஆர் கட்சியின் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கூறுகிறார்.

பெர்சாத்து தலைவர் முஹிடின் யாசின் துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் ஆகிய இரு தலைவர்களுக்கு இடையிலான அணிகள் மிகத் தீவிரமாக நேரெதிர் மோதலில் செயல்படுவதாக பெர்சாத்து கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறியதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பெர்சாத்து தலைவர்களுக்கிடையேயான சமரசம் “தேய்ந்துவிட்டது” என்றும் குறிப்பிடும் அவர், இதனால்தான் பெர்சாத்துவின் திடீர் தேர்தல் பேச்சு கட்சியின் உள் பிளவிலிருந்து திசை திருப்பும் முயற்சி என தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முஹிடினும் ஹம்சாவும் சிறிது காலமாக பொதுவெளியில் ஒன்றாக காணப்படவில்லை என யுனேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் திடீர் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி தனது கட்சி இயந்திரத்தை இயக்கத் தொடங்கிவிட்டதாக பெர்சாத்து தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி பேசியது குறித்து யுனேஸ்வரன் கருத்துரைத்தார்.

சமரசம் ‘தேய்ந்துவிட்டதா’?

கடந்தாண்டு நவம்பரில், கட்சியில் ஏற்பட்ட உரசல்களைக் குறைக்க “சமரச அணியின்” தேர்தலை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததாக முஹிடின் கூறியிருந்தார்.

ஹம்சா மற்றும் அஸ்மின் அணிகளுக்கிடையேயான பதவிப் போராட்டத்தைத் தடுக்க இந்த சமரசம் செய்யப்பட்டதாக ஆரூடங்கள் வெளியிடப்பட்டன.

பின்னர் கட்சியின் தலைமைத்துவப் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அஸ்மினுக்கு வழிவிட ஹம்சா தலைமைச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்தார். எனினும், அந்த சமரசம் தற்போது “தேய்ந்துவிட்டதாக” யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

கட்சித் தேர்தல் பிளவுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள பெர்சாத்து உச்ச மன்றத்திலிருந்து முஹிடின் முடிவொன்றைப் பெற்றதையும் யுனேஸ்வரன்  சுட்டிக் காட்டினார்.

“அவர் செய்தது என்னவென்றால், அப்போதைய துணைத் தலைவர் அஹமட் பைசல் அசுமு துணைத் தலைவருக்கான போட்டியில் பின்வாங்கிய நிலையில், தன்னைத் தலைவராகவும் ஹம்சாவை துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்ய வைத்தார். ஆனால் அந்த சமரசம் தேய்ந்துவிட்டது. ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து அணி மாறியதைக் கருத்தில் கொண்டு, மேலும் சாத்தியமான விலகல்கள் எழலாம் என்றும் இதனைத் தடுக்க பெர்சாத்து தலைமைத்துவத்தால் முடியுமா என்றும் கேள்விகள் எழுகின்றன,” என்றார் யுனேஸ்வரன்.

முன்னாள் பெர்சாத்து தலைவர் மகாதிர் முகமட் ரையிசும் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகினார், ஆளும் கட்சியில் இணையப்போவதாக குறிப்பிட்டார்.

ஊழல் மேகம்

பெர்சாத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகளையும், எதிர்க்கட்சி கூட்டணி பெரிக்காத்தான் நேஷனலில் பாஸ் கட்சியின் “பெரிய சகோதரர்” பங்கையும் யுனேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

“நடந்துகொண்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு மத்தியில் எத்தனை பெர்சாத்து தலைவர்கள் அதிகாரத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளனர்? எதிர்கால தேர்தல்களில் பிளவுபட்ட கட்சியை சுமக்க வேண்டியது குறித்து கட்சியின் பெரிய சகோதரர் பாஸ் என்ன நினைக்கிறது? ஏனெனில் பாஸ் ஆதரவால் பெர்சாத்து வென்ற இடங்கள் உள்ளன. ஆனால் அதற்கு நேர்மாறாக பெர்சாத்து ஆதரவால் பாஸ் வென்ற இடங்கள் என்பது அரிதாகவே உள்ளது,” என்றார் யுனேஸ்வரன்.

கடந்த மாதம், பெர்சாத்துடன் ஒப்பிடும்போது தனது கட்சியின் அரசியல் வலிமையைக் காரணம் காட்டி இஸ்லாமிய கட்சியான பாஸ் பெரிக்காத்தான் நேஷனலை வழிநடத்த வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் கூறினார் என்பதையும் யுனேஸ்வரன் நினைவுகூர்ந்தார்.

நடப்பு நாடாளுமன்றத்தில் பாஸுக்கு 43 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன, பெர்சாத்துவுக்கு 25 இடங்கள் உள்ளன.