பாலி – இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் இரண்டு மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தோனிசியாவிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைது குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக இந்தோனிசியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ சாஹ்ரேன் முகமட் ஹாஷிமிடம் இந்தோனிசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 36 வயதுடைய விளையாட்டுத் துறை அதிகாரி என்றும் மற்றொருவர் மலேசிய உயர்கல்வி நிலையமொன்றில் பயின்று வரும் 22 வயது மாணவன் என்றும் அவர்கள் பாலி உங்குரா ராய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என்றும் மலேசியத் தூதர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பயணப் பெட்டிகளில் அந்தப் போதைப் பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்களிடம் 100 போதைப் பொருள் மாத்திரைகளும், 70 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அவை பாலி தீவிலுள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன.
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் சிறையும், 3 இலட்சம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.