பெங்களூர் – கடந்த திங்கட்கிழமை பெங்களூர் அருகே நடந்த ‘மஸ்திகுடி’ என்ற கன்னட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின் போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த இரு ஸ்டன்ட் நடிகர்களான உதய், அனில் இருவரும் நீரில் மூழ்கினர்.
தற்போது அவர்கள் இருவரின் உடலையும் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ஹெலிகாப்டரில் இருந்து குதித்த மூவரில் கதாநாயகன் துனியா விஜய்க்கு மட்டும் பாதுகாப்பு அங்கி கொடுக்கப்பட்டு, மற்ற இருவருக்கும் பாதுகாப்பு அங்கிகள் தரப்படாமல் இருந்ததே இவ்விபத்திற்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில், இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பல திரை நட்சத்திரங்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் படங்களில் சண்டைக் காட்சிகளுக்குப் பெயர் போன நடிகர் ஜான் ஆப்ரஹாம் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், “இரு கன்னட நடிகர்கள் தங்கள் உயிரை இழந்தது உண்மையில் வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது. நான் அந்தக் காணொளியைப் பார்த்தேன். கண்டிப்பாக அது ஒரு பொறுப்பற்ற செயல். அப்படத்தயாரிப்பாளரை சிறையில் தள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள கருத்தில், “விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களின் குடுப்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்டண்ட் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் நோக்கில் அவர்களைப் பற்றி, ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி வரும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இச்சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் அவர்கள் இருவரையும் ஏரியில் குதிக்கச் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தவறு என்றும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.