Home Featured இந்தியா அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பை முறியடித்த மோடியின் அறிவிப்புகள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பை முறியடித்த மோடியின் அறிவிப்புகள்!

600
0
SHARE
Ad

Narendra Modi

புதுடில்லி – இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்புகள் குறித்த செய்திகளை வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தன. சில அலைவரிசைகள் ஒரு மாற்றமாக இந்திய அரசியல் விவகாரம் தவிர்த்து, அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த விவகாரங்களை விவாதிக்கும் மும்முரத்தில் ஈடுபட்டிருந்தன.

திடீரென வந்தது ஒரு செய்தி!

#TamilSchoolmychoice

இரவு 8.00 மணிக்கு இந்தியப்  பிரதமர் நாட்டு மக்களுக்கு முக்கிய உரை ஒன்றை நிகழ்த்துவார் என்ற அறிவிப்புதான் அது.

முன்னதாக, அமைச்சர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்திய நரேந்திர மோடி, ஆயுதப் படைகளின் தளபதிகளையும் சந்தித்திருந்தார்.

எனவே, ஏதோ முக்கிய அறிவிப்பு வெளியிடப் போகின்றார் என நினைத்து, இந்திய மக்கள் அனைவரும் தொலைக்காட்சி திரைகளின் முன் தங்களின் கண்களைப் பதித்துக் காத்திருந்தனர்.

பாகிஸ்தானுடனான போர் குறித்த அறிவிப்புகளாக இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், 8.00 மணியளவில் நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கின.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முக்கிய அறிவிப்பையும், அதனைத் தொடர்ந்த மற்ற அறிவிப்புகளையும் தொடர்ந்து இந்திய நாடே கலகலக்கத் தொடங்கியது.

தங்களிடமிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் மண்டை காய சிந்திக்கத் தொடங்க, அடுத்த சில கணங்களில் ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்பும் இந்திய மக்களின் எண்ணங்களில் இருந்து மறைந்து போயினர்.

தொலைக்காட்சிகளில், பரபரவென விவாதங்களுக்கான தலைப்புகள் மாற்றப்பட்டன. தொலைக்காட்சி விவாத அரங்குகளுக்கு வந்து, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதங்களில் ஈடுபடக் காத்திருந்தவர்கள், மோடியின் பண அறிவிப்புகள் குறித்து, விவாதிக்கத் தயாரானார்கள்.

ஒரே இரவில் மோடியின்  அறிவிப்புகள் – அமெரிக்க அதிபர் தேர்தலின் சுவாரசியத்தையும், பரபரப்பையும் இந்தியாவைப் பொறுத்தவரை  இருட்டடிப்பு செய்துவிட்டது. இதன் தாக்கம் உலகம் எங்கும் பரவியுள்ள இந்தியர்களிடத்திலும் எதிரொலித்தது.

அடுத்த சில நாட்களுக்கு இந்திய நாடு முழுவதிலும் மோடியின் அறிவிப்பு குறித்த தாக்கம்தான் இருக்குமே தவிர, அமெரிக்க அதிபருக்கான தேர்தல் செய்திகள் இந்திய மக்களின் மனங்களில் படிவதற்கு சில நாட்களாகலாம்.

– இரா.முத்தரசன்