கோலாலம்பூர் – அஸ்ட்ரோ ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ பாடல் திறன் போட்டியில், 10 வாரங்களாக நடைபெற்று வந்த இசை போரில், இறுதியாக, மாபெரும் இறுதிச்சுற்றுக்கு 6 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் குரல், உச்சரிப்பு, பாடல்வரிகள் என பலவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்த நீதிபதிகள் பாடகர் கிரிஷ்,நடிகையும், பாடகியுமான ரம்யா மற்றும் பாடகி பிரீத்தா பிரசாத் ஆகியோர், தங்களின் வெளிப்படையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, அவர்களின் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் அறிவுரைகளை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இறுதியாக 10 போட்டியாளர்களில், சிலாங்கூரைச் சேர்ந்த அலெக்ஸ் ராவ் (வயது 26), கோலாலம்பூரைச் சேர்ந்த குமரேஸ் (வயது 22), பினாங்கைச் சேர்ந்த நாராயணி (வயது 24), பேராக்கைச் சேர்ந்த போமதிபிரியா(வயது 20), சிலாங்கூரைச் சேர்ந்த சிந்திஹாசினி (வயது 22), பேராக்கைச் சேர்ந்த ரூபன்ராஜ் (வயது 23) ஆகிய 6 போட்டியாளர்களும் மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.
நாளை நவம்பர் 19-ம் தேதி, சனிக்கிழமை, இரவு 8 மணிக்கு ஷா ஆலாமில் அமைந்துள்ள ராஜா மூடா மூசா அரங்கில் மிகப் பிரண்டமான முறையில் நடைபெறவுள்ள ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ இறுதிச்சுற்றில் நீதிபதிகளின் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் பெற்று இறுதியாக மகுடம் சூடப்போவது யார்? என்று இப்போதே அஸ்ட்ரோ ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மூன்று பிரிவுகளாக நடைப்பெறவிருக்கும் இந்த இறுதிச்சுற்றில் நீதிபதிகளாக பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் மற்றும் பின்னணி பாடகி மாதங்கி வலம் வரவிருக்கின்றனர்.
இவர்களோடு, மலேசியாவின் புகழ்பெற்ற கலைஞர் ஒருவரும் இப்போட்டியில் நடுவராகப் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: Astro Ulagam