கோலாலம்பூர் – கடந்த இரண்டு நாட்களாக நட்பு ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தது ஒரு செய்தி.
தாய்லாந்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இறந்து போன தனது காதலியின் நினைவாக இராஜநாகம் ஒன்றைத் திருமணம் செய்து கொண்டு அதனுடன் வாழ்ந்து வருவதாகவும், அப்பாம்புடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது, மெத்தையில் உறங்குவது என எந்த ஒரு அச்சமும் இன்றி அவர் சகஜமாக இருப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
அதோடு, அந்த இளைஞர் பாம்புடன் இருக்கும் படங்களும் இணையதளங்களில் வெளியாகியிருந்தது.
கிட்டத்தட்ட இந்தக் கதையை வைத்து ஒரு திரைப்படமே எடுத்துவிடலாம் என்ற அளவுக்கு அத்தகவல் பலவகையில் இட்டுக்கட்டப்பட்டு, புகழ்பெற்ற ‘டெய்லி மெயில்’, ‘டெய்லி மிரர்’ உட்பட உலகமெங்கும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி காட்டுத் தீயெனப் பரவியது.
இந்நிலையில், அவர் தாய்லாந்தைச் சேர்ந்த வாலிபர் இல்லை என்பதும், அவர் பாம்பைத் திருமணம் செய்து கொண்டு வாழவில்லை என்பதும் தற்போது, ‘தி ஸ்டார்’ இணையதளம் மூலமாகத் தெரியவந்துள்ளது.
உண்மையில் அவர் யார் என்றால், மலேசியத் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் 31 வயதான அபு சாரின் ஹுசைன் என்ற வீரர் தான்.
மலேசியத் தீயணைப்புத் துறைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது அதாவது மலேசியாவில் அதிகமாகக் காணப்படும் அரிய வகை இராஜநாகங்களைப் பிடித்துப் பாதுகாப்பதும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவை தென்பட்டுவிட்டால், பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை பிடித்து அடர்ந்த காடுகளில் விடுவதும் அவர்களின் பணிகளில் ஒன்று.
இதற்கென பிரத்யேகமாக தீயணைப்புத் துறையில் தனிப்பிரிவு உண்டு. அவர்களுக்கு இராஜநாகங்களை லாவகமாகப் பிடிப்பதற்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்தப் பிரிவில் இருப்பவர் தான் அபு சாரின் ஹுசைன். தீயணைப்பு வீரர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளித்து வருகின்றார்.
பாம்பின் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ள அவர் தன்னுடன் வைத்திருந்த ஒரு இராஜநாகத்தின் புகைப்படங்கள் தான் தற்போது இணையதளங்களில் பல்வேறு கதைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
இது குறித்து ஸ்டார் இணையதளத்திற்கு நேற்று வியாழக்கிழமை அபு சாரின் அளித்துள்ள பேட்டியில், “அது என்னுடைய படங்கள் தான். என்னுடைய படங்களைப் பயன்படுத்தி பல்வேறு கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். நான் பாம்பைத் திருமணம் செய்துள்ளேன் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
“ஒரு செய்தியை வெளியிடும் போது, அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பத்திரிகை தர்மத்தை மீறி பொய்யைப் பரப்பியுள்ள வெளிநாடு செய்தியாளர்களின் செயலால் நான் அதிருப்தியடைந்திருக்கிறேன். குறிப்பாக அப்படங்கள் என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன” என்று அபு சாரின் தெரிவித்துள்ளார்.
தகவல் – நன்றி தி ஸ்டார்