இஸ்லாமாபாத் – நேற்று நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தானின் தீவிரவாதிகள் சிலர் மும்பையில் நுழைந்து தாக்குதல் நடத்தி பலர் உயிரிழந்த சம்பவம் நினைவுகூரப்பட்ட வேளையில், பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதியாக குவாமார் ஜாவேத் பஜ்வா (படம்) என்பவர் நியமிக்கப்பட்டார்.
பதவி விலகிச் செல்லும் ரஹில் ஷாரிப்புக்குப் பதிலாக பஜ்வாவை பிரதமர் நவாஸ் ஷெரிப் நியமித்துள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தியவர் என்ற முறையிலும், இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியவர் என்ற முறையில் பஜ்வா பாகிஸ்தானில் பொதுமக்களிடையே பிரலபமானவராகத் திகழ்கின்றார்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அந்நாட்டின் இராணுவத் தளபதி எப்போதுமே முக்கியமானவராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பார்க்கப்படுகிறார். காரணம், சுதந்திரம் பெற்ற பின்னர், 69 ஆண்டுகால வரலாற்றில் ஏறத்தாழ பாதி ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நாடு பாகிஸ்தானாகும்.
இந்தியாவுடனான எல்லைத் தகராறுகள் மிகவும் முற்றிய நிலையில், புதிய இராணுவத் தளபதி பதவியேற்பதும் அனைத்துத் தரப்புகளாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது.
புதிய இராணுவத் தளபதியின் பதவி மாற்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 190 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில் – உலகின் ஆறாவது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டில் – அண்டை நாடான இந்தியாவுடன் தூதரக மற்றும் எல்லைத் தகராறுகள் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ள சூழலில் – புதிய இராணுவத் தளபதி பஜ்வாவின் வரவு மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.