Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘சைத்தான்’ – முதல் பாதி மட்டும் சுவாரசியம்!

திரைவிமர்சனம்: ‘சைத்தான்’ – முதல் பாதி மட்டும் சுவாரசியம்!

1086
0
SHARE
Ad

main2கோலாலம்பூர் – ‘சைத்தான்’ படத்தின் முதல் பார்வை வெளிவந்த நாளில் தொடங்கி, அண்மையில் யூடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 10 நிமிடக் காட்சிகள் வரை அனைத்துமே பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் அமைந்திருந்தது.

‘நான்’, ‘சலீம்’ என்ற இரண்டு திகில் படங்களின் மூலம் ஒரு புதிய டிரண்டை உருவாக்கி, தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிலைநிறுத்திக் கொண்ட விஜய் ஆண்டனி, அதே பாணியில் ‘சைத்தான்’ படத்தின் மூலம் என்னமோ ஒன்றை புதிதாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

யார் அந்த ஜெயலஷ்மி? என்று முன்னோட்டத்தைப் பார்த்து யோசிக்காதவர் இருந்திருக்க முடியாது.

#TamilSchoolmychoice

இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்குக் கிடையில் வெளிவந்திருக்கும் ‘சைத்தான்’ ரசிகர்களை திருப்திபடுத்துகிறதா? – பார்ப்போம்..

கதை என்ன?

saithan1ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் விஜய் ஆண்டனி, கணினியில் உள்ள சிக்கல்களை உடனடியாகச் சரி செய்வதில் வல்லவர். அதனால் அவரது முதலாளி ஒய்ஜி.மகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமான பணியாளராக இருக்கிறார்.

நல்ல வேலை, சம்பளம், பாசமான அம்மா என்று மகிழ்ச்சியோடு இருக்கும் விஜய் ஆண்டனி, இணையதளம் ஒன்றின் மூலமாக வரன் பார்த்து அருந்ததி நாயரை திருமணம் செய்கிறார். திருமணமாகி ஒரு சில நாட்களிலேயே விஜய் ஆண்டனியின் தலைக்குள் ஏதோ குரல் ஒன்று கேட்டு அவரை பயமுறுத்தத் தொடங்குகிறது.

அக்குரல் சொல்வதைக் கேட்டு தற்கொலை வரை செல்லும் விஜய் ஆண்டனி அதன் பின் மனநல மருத்துவர் கிட்டியிடம் செல்கிறார். அங்கு அவரது பூர்வ ஜென்மம் என்னவென்று தெரிகிறது. அதில் ஜெயலஷ்மி என்ற ஒரு பெண் பற்றி தெரியவருகிறது. ஜெயலஷ்மி யார்?, அவரை இந்த ஜென்மத்தில் எங்கே இருக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் இரண்டாம் பாதி கதை.

ரசிக்க

saithan-movie-11சுஜாதாவின் ‘ஆ’ நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பாதி உண்மையில் மிரள வைக்கிறது. விஜய் ஆண்டனி கொஞ்சம் கொஞ்சமாக மண்டைக்குள் கேட்கும் குரலின் கட்டுப்பாட்டிற்குள் வருவதும், அதிலிருந்து மீள நினைப்பதுமாக மிகச் சிறந்த நடிப்பு.

“தெரியல டாக்டர்.. ரெண்டு மூனு குரல் கேட்குது.. அதுல ஒன்னு என் குரல் மாதிரி இருக்கு.. இன்னொன்னு கடவுள் குரல் மாதிரி இருக்கு” என்று விஜய் ஆண்டனி ஒரு மாதிரி தலை சாய்ந்து சொல்லத் தொடங்கும் போதே நம்முள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

அதன் பின்னர் ‘ஜெயலஷ்மீமீமீமீ…’ என்ற அந்த பாடல் ஒருவித அச்ச மனநிலையை ஏற்படுகின்றது. இப்படியாக இடைவேளை வரை போடப்படும் பல மர்ம முடிச்சுகள் நிச்சயமாக ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

விஜய் ஆண்டனிக்கு இணையாக அருந்ததி நாயருக்கும் நடிப்பதற்கு இடமுள்ள நல்ல கதாப்பாத்திரம். அதற்கு ஏற்ப அவரது இயல்பான முகவெட்டும், உடல்வாகும் அக்கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது. புதிதாகத் திருமணமான பெண்ணின் ஆசைகளையும், உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

saithan-movie-10இவர்களோடு, ஒய்ஜி.மகேந்திரன், கிட்டி, சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

“மச்சான்.. அடுத்தவாட்டி.. மண்டைக்குள்ள அந்த குரல் கேட்டுச்சுன்னா.. சார் வீட்ல இல்ல.. வெளியூர் போயிருக்காரு.. நாளைக்கு தான் வருவாருன்னு சொல்லு” என்று எதிர்பாராத நேரத்தில் குபுக்கென்று சிரிக்க வைத்த இடத்தில் மட்டும் முருகதாஸ் தெரிகிறார்.மற்ற இடங்களில் அவரை “வாட் த ஹெல்’ என்று பேச வைத்து ஐடி பணியாளராக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.

பிரதீப் கலிபுரயத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. பூர்வ ஜென்மத்தில் நடப்பதாகக் கூறும் காட்சிகள் இயல்பாகத் தெரிகின்றன. அதோடு, நிலவை பாம்பு விழுங்குவது, இரயில் பாய்ந்து வருவது போன்ற படத்தொகுப்பு வேலைகளும் ரசிக்க வைக்கின்றன.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்கும் இரகம். என்றாலும் ஜெயலஷ்மி பாடலில் இருக்கும் ஒருவித ஈர்ப்பு மற்ற பாடல்களில் இல்லை.

சொதப்பல்

படத்தின் இரண்டாம் பாதி தான் இப்படத்தின் மீதான ரசனையைக் குறைக்கும் காரணியாக அமைந்துவிட்டது. காரணம், ஏற்கனவே ஹாலிவுட் தொடங்கி அண்மைய தமிழ்ப் படங்கள் வரை பல படங்களில் சொல்லப்பட்ட அதே சட்டவிரோத செயல் தான்..

saithan-movie-18அது தான் திருப்பம் என்று தெரிந்தவுடன் காற்றுப் போன பலூனாக நமது ஆர்வம் குறைந்துவிடுகின்றது.

வில்லன் அறிமுகத்தை பெரிய அப்பாட்டக்கராகக் காட்டிவிட்டு, அதன் பின் அவனை திருக்குறள் சொல்லச் சொல்லி தலையில் தட்டுவதெல்லாம் நெருடலின் உச்சம்.

இரண்டாம் பாதி கதையை திரைக்கதை ஆக்குவதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுருக்கலாம்.

‘சைத்தான்’ என்ற பெயரும், போஸ்டரில் சிவந்த கண்களுடன் விஜய் ஆண்டனியின் சைக்கோத்தனமான முகமும் ஏற்படுத்திய தாக்கமும், எதிர்பார்ப்பும் படம் முடிந்து வெளியே வரும் போது இல்லாமல் போய், இதுல ‘சைத்தான்’ எங்க இருக்கு? என்ற அதிருப்தியுடன் வீடு திரும்ப வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘சைத்தான்’ –  முதல் பாதி மட்டும் சுவாரசியம்! இரண்டாம் பாதி திரைக்கதையில் சறுக்கல்!

– ஃபீனிக்ஸ்தாசன்