இஸ்கண்டார் புத்ரி – கடந்த ஞாயிற்றுக்கிழமை தித்திவாங்சா விளையாட்டு மைதானத்தில், ரோஹின்யா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மலேசியர்கள் நடத்திய ஒன்றுகூடல், இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பின் கவனத்தை (Organisation of Islamic Cooperation) ஈர்த்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசியர்களின் இந்த ஒன்றுகூடல் நிகழ்வினால், இஸ்லாமியக் கூட்டறவு அமைப்பு, வெளியுறவுத்துறை அமைச்சுடன் ரோஹின்யா விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கவுள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் நஜிப் பேசுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் நடத்திய ஒன்று கூடல் நிகழ்வை, இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு கவனித்தது. அதோடு, ரோஹின்யா இன மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ளவை குறித்து அவர்கள் கலந்தாலோசிப்பார்கள்” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.