இஸ்லாமாபாத் – பாகிஸ்தான் இண்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் ஏடிஆர் 42 ரக (ATR-42) விமானம் 42 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள், விமானம் பழுதுபார்க்கும் பொறியியல் நிபுணர் ஒருவர் ஆகியோருடன் இன்று பாகிஸ்தானின் மலைப் பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில் பயணம் செய்த 48 பேரும் உயிரிழந்தனர். சிட்ரல் என்ற நகரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்த பிகே 661 (PK 661) என்ற வழித்தடம் கொண்ட இந்த விமானம் பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ஆனால், பிற்பகல் 4.30 மணியளவில் ராடார் கருவியின் பார்வையிலிருந்து மறைந்தது.
அப்போட்டாபாட் என்ற இடத்திற்கு அருகிலுள்ள மலைப்பிரதேசத்தில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.
பாகிஸ்தானின் பிரபல பாடகரும், இஸ்லாமிய மத போதகராக மாறியிருப்பவருமான ஜூனாயிட் ஜாம்ஷெட் என்பபவரும் அந்த விமானத்தில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் ஹெலிகாப்டரோடு மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடம் நோக்கி விரைந்துள்ளனர். விழுந்த இடம் மலைப் பிரதேசம் என்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.