Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: தேவை சில அதிரடி மாற்றங்கள்…!

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: தேவை சில அதிரடி மாற்றங்கள்…!

916
0
SHARE
Ad

astro-super-star-final-banner

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 19-ஆம்  தேதியோடு நிறைவு பெற்ற இந்த ஆண்டுக்கான அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி நிகழ்ச்சி பல அம்சங்களில் இரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், புதிதாக முளைத்து வரும் நமது உள்நாட்டுக் கலைஞர்களின் தரமும், வளமும் இவ்வளவுதானா என நம்மை ஏக்கம் கொள்ள வைக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

சில கட்டங்களில் நிகழ்ச்சியின் போக்கு போரடிப்பையும், பார்ப்பவர்களிடத்தில் வெறுப்பையும் ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

16-வது ஆண்டாக நடத்தப்படும் நிகழ்ச்சியாக இருந்தபோதும், அதைப் பார்க்கும்போது நாம் அடுத்த கட்டத்திற்கு தாண்டிச் செல்லவில்லை, இன்னும் தொடங்கிய இடத்திலேயேதான் நின்று கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வையே ஏற்படுத்தியது.

ஒரு நாட்டிலுள்ள, ஒரு மொழியின் பாடல் திறன் போட்டி என்னும் போது, இரண்டு முக்கிய அம்சங்கள் வெளிப்பட வேண்டும். ஒன்று, அந்த நாட்டின் கலைத் திறமைகளை ஒட்டு மொத்தமாக படம் போட்டுக் காட்டும் வண்ணம், பிரதிபலிக்கும் வண்ணம், அந்தப் பாடல் திறன் போட்டி களமாக அமைய வேண்டும்.

மற்றொன்று, அந்தப் பாடல் திறன் போட்டிகள் முடிவடைந்து வெற்றியாளர்கள் வெளிச்சத்துக்கு வரும்போது, நாட்டின் கலையுலகுக்கு எதிர்கால கலைஞர்கள் சிலரை அடையாளம் கண்டு, முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என்ற பெருமிதம் பார்க்கும் இரசிகர்களுக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட வேண்டும்.

ஆனால், இந்த இரண்டு முனைகளிலும் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்பதையும், பெருத்த ஏமாற்றத்தையும் விளைத்தது என்றுதான் கூற வேண்டும்.

பாராட்டுக்குரிய அம்சங்கள்

astro superstar-grand-finale-6-finalists

2016-ஆம் ஆண்டுக்கான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள்

இருப்பினும் ஒட்டு மொத்த நிகழ்ச்சியையும் நாம் குறை சொல்லவில்லை. மலேசியத் தமிழர்கள் என்ற முறையில் நாம் பெருமைப்படக் கூடிய, பாராட்டக் கூடிய பல அம்சங்கள் நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

முதலில் அந்தப் பாராட்டுக்குரிய அம்சங்களைப் பார்த்து விடுவோம்:-

  • சிறந்த தயாரிப்பு

சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தயாரிப்பு, உலகத் தரத்துக்கான அளவில் இருந்தது என்றால் மிகையாகாது. இதையே நடுவர்களும் பல கட்டங்களில் பாராட்டிக் கூறினர்.

குறிப்பாக மேடை அமைப்பும், நிகழ்ச்சியின் தொடக்கப் பாடல் நடனங்களும்,  இடையிடையே நிகழ்ச்சியில் படைக்கப்பட்ட குழு நடனங்களும் அசத்தும் வகையிலும், கண்ணைப் பறிக்கும் வகையிலும் அமைந்திருந்தன. ஆடையலங்காரங்களும் ஒப்பனைகளும் அற்புதம்.

அதிலும் விண்மீன் அலைவரிசையில், துல்லிய ஒளிபரப்பில் நமது கண்களுக்கு வண்ணமயமான விருந்தாகவே நிகழ்ச்சியின் தோற்றம் அமைந்திருந்தது.

சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தின் மூலம், தயாரிப்பாளர்களின் உழைப்பும், அவர்களின் செலவினங்களும் திரையில் பிரதிபலிக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சிகளின் தரம் சிறப்பாக அமைந்திருந்தது. உள்நாட்டிலேயே நம்மாலும் இதுபோன்ற உலகத் தரத்திலான நிகழ்ச்சிகளை உருவாக்கித் தர முடியும் என சவால் விடும் வண்ணம் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டாரின் தயாரிப்புத் தரம் அமைந்திருந்தது.

  • சிறந்த நடுவர்கள்

krish

தலைமை நடுவராகப் பணியாற்றிய பாடகர் கிரிஷ்

நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பணியாற்றியவர்களின் இசையறிவும், புலமையும் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்களின் வலுவான இசை அனுபவப் பின்னணியால் அவர்கள் நல்ல கருத்துகளை போட்டியாளர்களுக்குக் கூறினார்கள்.

நடுவர்களின் திறனைப் பற்றியும், அப்பழுக்கற்ற நேர்மையான, பாரபட்சமற்ற அணுகுமுறைகள் பற்றியும் குறை சொல்வதற்கில்லை.

சில குறைகள் இருக்கின்றன என்றாலும் அவற்றைப் பின்னர் பார்ப்போம்.

  • மற்ற துறை சூப்பர் ஸ்டார்களுக்கு பரிசளிப்பு

astro-super-star-judges

இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக பிரபல பின்னணி பாடகர் கிரிஷ், பின்னணிப் பாடகி மாதங்கி மற்றும் மலேசியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜெய்

இறுதிக் கட்ட நிகழ்ச்சியின்போது, நமது நாட்டில் பல துறைகளிலும் சாதனை புரிந்த, சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த – அதிலும் போன தலைமுறை சாதனையாளர்களை – நினைவு கூர்ந்து கௌரவித்தது பொருத்தமான இணைப்பு.

பாடல் திறன் சாதனையாளர்களை அடையாளம் காணும் நிகழ்ச்சியில் மற்ற துறை சாதனையாளர்களையும் இன்றைய தலைமுறையினருக்கு நினைவு கூர்ந்தது பாராட்டத்தக்க அம்சம்.

நிகழ்ச்சியின் குறைகள்…..பலவீனங்கள்….பாடகர்களின் தரம்….

ஒரு நிகழ்ச்சி எவ்வளவுதான் தரமாக, பிரம்மாண்டமாக இருந்தாலும், பாடல் திறன் போட்டி என்று வரும்போது அதன் உள்ளடக்கம்தான் – அதாவது பாட வருபவர்களின் பாடும் திறன்களும், குரல் வளமும், இசையறிவும் இணைந்த உள்ளடக்கம்தான் – அந்த நிகழ்ச்சியின் வெற்றியை தரத்தை, உறுதி செய்கின்றது.

astro-super-star-finalists

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் இறுதிச் சுற்று வெற்றியாளர்கள்…

இதற்கு நாங்கள் என்ன செய்வது, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது. எப்படி சிறந்த கலைஞர்களை அடையாளம் கண்டு உள்ளே கொண்டு வருவது என்பது குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

காரணம், முதல் சுற்றுகளில் வந்த போட்டியாளர்கள் மோசமாகப் பாடி வெளியேறியது ஒரு புறமிருக்க, இறுதிச் சுற்றுகளுக்கு வந்த பாடகர்கள் கூட, “சுதி சரியில்லை, ராகத்தை விட்டுவிட்டீர்கள், உச்சரிப்பு சரியில்லை, இசையோடு இணைந்து வரவில்லை” என்பது போன்ற குறை கூறல்களை நடுவர்களிடமிருந்து இறுதிச் சுற்றுகளில் கூட பெற்றது, நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்தது.

போட்டிகளை அனைத்து தரப்புகளுக்கும் திறந்து விடுங்கள்

astro-super-star-opening-performance

அழகான, அசத்தலான மேடை அமைப்பு – அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டாரின் சிறப்பு அம்சங்கள்

பாடல் திறன் போட்டிகளை புதியவர்களுக்கு மட்டும் என இனி வைத்துக் கொள்ளாமல், அனைத்து வயதினருக்கும், தரப்பினருக்கும் திறந்து விடுவதுதான் இதற்கான தீர்வாக இருக்கும் எனக் கருதுகின்றோம்.

ஏற்கனவே மேடைகளில் பாடியவர்கள், புகழ் பெற்றவர்கள், நீண்ட காலம் பாடி வருபவர்கள் என்று இருந்தாலும், அத்தகையவர்களுக்கும் போட்டியில் பங்கு பெற வாய்ப்பளித்தால் அதன் மூலம் நிகழ்ச்சியின் தரம் மேலும் அதிகரிக்கும் என்பதோடு, நமது மூத்த உள்நாட்டுக் கலைஞர்களின் திறனையும் நாம் பெருமையுடன் எடுத்துக் காட்டும் வண்ணம் வெளிக் கொண்டு வரலாம்.

பழையவர்களும் பாட வருவதால், புதியவர்கள் அடிபட்டுப் போவார்கள், காணாமல் போவார்கள் என்ற அச்சம் இருந்தால், ஒரே நிகழ்ச்சியில் எல்லாரையும் மோதவிட்டு விட்டு, புதிய, இள வயதுப் பாடகர்களுக்கு தனியாக பரிசுகளை வழங்கலாம். அவர்களுக்கென தனியான தேர்வுகள் வைக்கலாம். இதன் மூலம், புதியவர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் தடைபடாது – சிறந்த பழைய பாடகர்களின் வருகையால் நிகழ்ச்சியின் தரமும் உயரும்.

இசை வகுப்புகள்

astro-super-star-round-3-kumaresh-naarayani

அஸ்ட்ரோ இறுதிச் சுற்றில் போட்டியாளர்கள் குமரேஷ், நாராயணி

சூப்பர் ஸ்டார் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது என்பதோடு, இதற்காக பெரும் செலவில் ஏற்பாடுகள் செய்யப்படுவதால் அத்தகைய ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நிகழ்ச்சி தொடங்குவதற்கு சுமார் ஆறுமாதங்கள் முன்பாகவே, நாட்டில் இயங்கி வரும் இசை வகுப்பு நடத்தும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து அவர்களின் மூலமாக, அவர்களின் இசை வகுப்புகளில் சிறப்பாக பரிணமிக்கக் கூடியவர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற வைக்கலாம்.

பல திறமையான இளம் கலைஞர்கள் இதுபோன்ற இசை வகுப்புகளில் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் பகுதி நேரமாகவே, இசை பயின்று வருகின்றார்கள். மேடைக் கூச்சம், நேரமின்மை, போன்ற பல காரணங்களால் இவர்கள் போட்டிகளில் பங்கு பெற முன் வருவதில்லை.

இசை ஆசிரியர்களை ஒருங்கிணைப்பதன் மூலம், நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே சிறந்த மாணவர்களை அடையாளம் கண்டு தகுந்த பயிற்சிகள் கொடுத்து அவர்களை நிகழ்ச்சிகளில் பங்கு பெற வைக்கலாம். நிகழ்ச்சியின் தரமும் உயரும்.

அறிவிப்பாளர்கள் குறைத்துப் பேசுவது நல்லது

astro-superstar-endrum-16-champion-kumaresh

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் வெற்றியாளர் குமரேஷ்…

சூப்பர் ஸ்டாரின் அறிவிப்பாளர்கள் சில வகைகளில் சிறப்பாக பரிணமித்தாலும், சில சமயங்களில் அதிகமாக – அதிகப் பிரசிங்கித்தனமாக – பேசுவதாகப் படுகிறது.

குறிப்பாக, போட்டியாளர் பாடி முடித்ததும், மூன்று நடுவர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்லக் காத்திருக்க அதற்கு, முன்பாகவே, அறிவிப்பாளர்கள் “நீங்கள் நன்றாகப் பாடியிருக்க வேண்டாமா? இவ்வளவு பெரிய மேடையை நீங்கள் சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டுமெல்லவா?” என்று தொடர்ந்து கேள்விக் கணைகளால் போட்டியாளர்களை வறுத்து, வாட்டியெடுத்தது எரிச்சலூட்டியது.

அதன் பின்னர் மீண்டும் நடுவர்கள் அதே போன்ற கேள்விகளால் தொடர்கின்றார்கள்.

astro-super-star-host-kumaresh-revathy

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டாரின் அறிவிப்பாளர்கள் குமரேஷ், ரேவதி…

ஒன்றுக்கு மூன்று பேர் என நடுவர்கள் அமர்ந்திருக்கும்போது, அறிவிப்பாளர்கள் போட்டியாளர்களின் பாடல் திறன் குறித்த கருத்துகளைப் பற்றி அதிகம் கூறாமல், அதனை நடுவர்களின் முடிவுக்கே விட்டு விடுவது நல்லது. மற்ற பொதுவான கருத்துகளை மட்டும் அறிவிப்பாளர்கள் கூறலாம்.

  • நடுவர்களின் சில கடினமான – நாகரீகமில்லாத வார்த்தைகள்

நடுவர்கள் எவ்வளவுதான் சிறப்பாகப் பணியாற்றினாலும் முதன்மை நடுவராகப் பணியாற்றிய கிரீஷ் போன்ற அனுபவம் வாய்ந்த நடுவர்கள் கருத்து கூறும்போது “வந்து அடிக்கணும்போல தோணுது….அடி வாங்கப் போற…” என்பது போன்ற வார்த்தைகளை இலட்சக்கணக்கான இரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் அடிக்கடிக் கூறுவது சற்று நாகரிகமில்லாத ஒன்றாகவே படுகின்றது.

இதுபோன்ற சில குறைகளை நிவர்த்தி செய்வது நல்லது.

மொத்தத்தில், நாம் கூறவருவது என்னவென்றால், ஒரு பாடல் திறன் போட்டி என்னும்போது அந்த நிகழ்ச்சி மக்களால் விரும்பப்படுவதற்கும், ரசிக்கப் படுவதற்கும் காரணமாக அமைபவை போட்டியாளர்களின் திறன்களும், உள்ளடக்கமும்தான் என்பதால், மேடை அலங்காரம், ஆடை அணிகலன்கள், ஒப்பனை போன்ற அம்சங்களில் காட்டப்படும் அக்கறையும் உழைப்பும், சரியான போட்டியாளர்களை அடையாளம் கண்டு உள்ளே கொண்டு வருவதிலும் இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் போன்ற ஆசியான் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து போட்டியாளர்களை வரவழைத்து பங்கெடுக்க வைப்பதும் நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தும்.

இறுதிச் சுற்றுக்கு வரும் 8 பேரும் அபாரமாகப் பாடுகிறார்களே, இவர்களில் யார் வெல்லப் போகின்றார்கள் என்ற பரபரப்பு பார்க்கும் இரசிகர்களிடம் பற்றிக் கொள்ளும்போதுதான் ஒரு  பாடல் திறன்போட்டி வெற்றியடைய முடியும்.

அதை நோக்கி, திட்டமிடப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி பயணம் செய்தால், சிறப்பாக இருக்கும்!

-இரா.முத்தரசன்