சென்னை – (மலேசிய நேரப்படி பிற்பகல் 4.00 மணி நிலவரம்) தமிழகத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள வார்தா புயல், கடும் மழையையும், பலத்த காற்றையும் கொண்டு வந்துள்ளதோடு, பல இடங்களில் கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னம் அருகில்,வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்களை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்
இது தொடர்பான பிற்பகல் 4.00 மணி (மலேசிய நேரம்) வரையிலான நிலவரம் பின்வருமாறு:
- பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதுவரை 133 மரங்கள் விழுந்துள்ளதாகவும் அவை உடனடியாக வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புயல் காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர், புயலால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் இடங்களிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தின் கரைகளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வார்தா புயல் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வார்தா புயல் தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் (மேலே படம்).
- பல இடங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
- புயல் கரை கடந்த பின்னரும் பொதுமக்கள் யாரும் இல்லங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரை கடந்த பின்னரும் சில அபாயங்கள் நேரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தமிழக அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….
- கடும் மழையைத் தொடர்ந்து, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் அப்புறப்படுத்தப்படுகின்றது.
- சென்னை விமான நிலையம் பிற்பகல் 3.00 மணிவரை (இந்திய நேரம்) மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து அம்மா உணவகங்களும் திறந்து வைக்கப்பட்டு இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.