Home Featured தமிழ் நாடு “சசிகலா தேர்வு துரதிர்ஷ்டவசமானது” – தீபா ஜெயகுமார் போர்க்கொடி

“சசிகலா தேர்வு துரதிர்ஷ்டவசமானது” – தீபா ஜெயகுமார் போர்க்கொடி

787
0
SHARE
Ad

deepa-jayakumar-jayallithaa-niece

சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார் (படம்) போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஆனால், அவரது எதிர்ப்பும், சாடல்களும் ஊடகங்களுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் தீனியாகுமே தவிர, கட்சியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தாது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

“சசிகலாவைத் தேர்ந்தெடுக்கும் முடிவு துரதிர்ஷ்டவசமானது. கட்சி உறுப்பினர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மக்கள் கண்டிப்பாக இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என தீபா கூறியதாக இந்தியாவின் ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

“வாய்ப்புகள் அமைந்தால் நான் அரசியலில் நுழைவேன். ஜனநாயக அமைப்பில் மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவது நல்லது. அவர்கள்தான் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். கட்சி அவர்களின் குரலைக் கேட்க வேண்டும். மக்களின் உணர்வுகளோடு ஒட்டி நின்று முடிவு எடுக்க வேண்டும் காரணம் அவர்கள்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப் போகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ள தீபா, ஜெயலலிதாவின் உடன்பிறந்த அண்ணன் ஜெயகுமாரின் மகளாவார்.

சிறிது காலம் அவர் ஜெயலலிதா வீட்டில் தனது அத்தைக்கு உதவியாக அவர் இருந்தார் என்றும் நல்ல திறன்களும், ஜெயலலிதாவைப் போன்றே முகவெட்டுடன் கூடிய அழகும் கொண்டவர் என்பதால், அவர் சசிகலா தரப்பினரால் ஜெயலலிதா இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

தீபா ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ஆனால், ஜெயலலிதா நல்லுடலின் அருகில் அனுமதிக்கப்படவில்லை.

தீபாவின் சகோதரர் தீபக், ஜெயலலிதாவுக்கான இறுதிச் சடங்குகளை சசிகலாவோடு இணைந்து செய்தார்.

ஜெயலலிதா சசிகலாவை ஏன் வாரிசாக அறிவிக்கவில்லை?

jayalalithaa vs sasikala

ஜெயலலிதா தனது வாரிசாக சசிகலாவைத் தேர்ந்தெடுத்திருந்தார் என்று கூறப்படும் தகவல்களை நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் மறுத்த தீபா, “ஜெயலலிதா சசிகலாவையோ, தனது உறவினர்களையோ வாரிசாக நியமிக்கவில்லை. அவர்களையெல்லாம் தனது அரசியல் வட்டத்திற்கு வெளியேதான் வைத்திருந்தார். நான் ஜெயலலிதா வட்டத்திற்குள் இருந்திருக்கிறேன். எப்போதும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையில் வாக்குவாதங்கள் நிகழும். சசிகலா தரப்பு எனது அத்தைக்குத் தெரியாமல் அவரது முதுகுக்குப் பின்னால் பல காரியங்கள் செய்தனர். அதனால் எனது அத்தை ஆத்திரப்பட்டார். ஆனால் இதுவெல்லாம் கட்சிக்காரர்களுக்குத் தெரியாது” என்றும் தீபா குறிப்பிட்டுள்ளார்.

“ஏன் ஜெயலலிதா சசிகலாவைத் தனது வாரிசாக அறிவிக்கவில்லை? அப்படிச் செய்வதாக இருந்தால் முன்பே அதை எப்போதோ செய்திருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை? அதை விளக்குவார்களா?” என்றும் தீபா அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கான இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தீபா அதிருப்தி தெரிவித்துள்ளார். “எங்களின் நெருங்கிய சொந்தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, அவர்கள் இறுதிச் சடங்குகளில் பங்கு கொண்டு தங்களின் கடமையை ஆற்ற வாய்ப்பும் வழங்கப்படவில்லை” என்றும் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான அதிருப்தியாளர்கள் தீபாவை விரைவில் நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிறுத்த நெருக்குதல் தந்து வருகின்றனர் என்றும் சில ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.