ஜகார்த்தா – இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 27 வயதான இந்தோனிசியப் பெண், கடந்த 2014-ம் ஆண்டு சிங்கப்பூரில் பணிப்பெண்ணாகப் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
டியான் யூலியா நோவி என்ற அப்பெண், பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த சமயத்தில், பேஸ்புக் மூலமாக ஜிகாதிகள் பற்றி அறிந்துள்ளார். பேஸ்புக்கில் அவர்களின் பக்கங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
முதலில் எந்த ஒரு இயக்கத்திலும் சேராத அவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜிகாதிகளின் கொள்கைகள் மீது ஈர்ப்பு கொண்டதாக டிவிஒன் என்ற தொலைக்காட்சி அளித்த பேட்டியில் டியான் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோவின் அலுவலகத்தில் 3 கிலோ எடையுள்ள குக்கர் வெடிகுண்டுடன், டியானும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.