Home Featured நாடு பாயா பெசார் தமிழ்ப் பள்ளியா? கோ.சாரங்கபாணி தமிழ்ப் பள்ளியா?

பாயா பெசார் தமிழ்ப் பள்ளியா? கோ.சாரங்கபாணி தமிழ்ப் பள்ளியா?

1011
0
SHARE
Ad

Kumaran-Tan-Sri-Slider

கோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை கூட்டப்படும் என்றும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்தப் பள்ளிகள் அமையும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விடுத்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, கூடுதல் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக, புதிதாக கூலிம் நகரில் பாயா பெசார் என்ற இடத்தில் கட்டப்பட்டு, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளது பாயா பெசார் தமிழ்ப் பள்ளி.

இந்தப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நஜிப், இந்தப் பள்ளிக்கு கோ.சாரங்கபாணியின் பெயர் சூட்டப்பட்டும் என அறிவித்திருந்தார். ஆனால், அப்பள்ளிக்கு இன்னும் அந்தப் பெயர் சூட்டப்படாமல், ஏன் இன்னும் பாயா பெசார் பள்ளி என்றே இயங்கி வருகின்றது என முன்னாள் துணையமைச்சரான டான்ஸ்ரீ க.குமரன் (படம்) கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

najib-opening-of-srjk-tamil-paya-besar

5 பிப்ரவரி 2016-இல் பாயா பெசார் தமிழ்ப் பள்ளியின் அதிகாரபூர்வ தொடக்க விழாவின்போது நஜிப், கல்வி அமைச்சர் மகாட்சிர், துணையமைச்சர் கமலநாதன்…

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் இன்று தழைத்தோங்கி வளர்ந்து நிற்பதற்கு முன்னோடிகளாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவர், தமிழவேள் என அழைக்கப்பட்ட அமரர் கோ.சாரங்கபாணி. தமிழ் முரசு என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தியவர். தற்போது அந்த நாளிதழ் சிங்கையில் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

நாட்டின் மிகப் பழமையான, முன்னணி இந்திய இளைஞர் அமைப்புகளில் ஒன்றான மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றங்களின், தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் கோ.சாரங்கபாணி என்பதும் தவிர்க்க முடியாத மற்றொரு முக்கிய பதிவாகும்.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி அமைவதற்கும், அதில் மைய மொழியாக தமிழ் இடம் பெறுவதற்கும் கோ.சா.ஆற்றிய பங்கும் அளப்பரியதாகும்.

பாயா பெசார் தமிழ்ப் பள்ளிக்கு கோ.சா. பெயரைச் சூட்டுவதற்கான அனுமதியை சிங்கப்பூர் சென்று மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் தலைவர் முரளி, அவரது குடும்பத்தாரிடம் இருந்து பெறுவதற்கு, சிங்கை தமிழ்ப் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிக்கண்ணுவின் ஒத்துழைப்புடன் தானும் முயற்சிகள் எடுத்ததாக நேற்றைய மக்கள் ஓசை நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் டான்ஸ்ரீ குமரன் நினைவு கூர்ந்துள்ளார்.

பாயா பெசார் தமிழ்ப் பள்ளி சம்பந்தப்பட்டவர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் என அனைவரும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, தமிழுக்காகப் போராடிய கோ.சா.வின் பெயரை பாயா பெசார் தமிழ்ப் பள்ளிக்கு சூட்டுவதற்கும் – பிரதமரின் வாக்குறுதியை செயல்படுத்துவதற்கும் – முன்வர  வேண்டும் என்றும் குமரன் வலியுறுத்தியுள்ளார்.