Home பொது முகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானார் கே.எஸ்.பவானி

முகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானார் கே.எஸ்.பவானி

2034
0
SHARE
Ad

ks-bawaniகோலாலம்பூர், ஜனவரி 15 – முகநூல் என்றும் வதனப் புத்தகம் என்றும் (Facebook) அழைக்கப்படும் சமூக வலைத் தளம் மூலம் ஒரே நாளில் மலேசியா முழுக்க பிரபலமாகி விட்டார் கே.எஸ்.பவானி (படம்-இடது) என்ற யுனிவர்சிடி உத்தாரா மாணவி.

சட்டத் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் கே.எஸ்.பவானி என்ற மாணவி கடந்த மாதம் உத்தாரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற “பல்கலைக் கழக மாணவர்கள் அரசியலோடு நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மலேசியாவில் ஏன் கல்வியை பல்கலைக் கழகம் வரை இலவசமாக வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

பிடிபிடிஎன் கல்விக் கடனுதவிக்கு எத்தனையோ கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் செய்வது போல், மற்ற செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்வதுபோல் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி வழங்குவதற்கும் ஏன் அரசாங்கம் உதவி செய்யக் கூடாது என்று மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

அவ்வாறு பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி வழங்கும் நாடுகளின் பெயரையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

அவருக்கு பதிலளித்த அந்த கருத்தரங்கின் நடுவரும் 1மலேசியா சுவாரா வனித்தா எனப்படும் ஒரே மலேசியா மகளிர் குரல் அமைப்பின் தலைவருமான ஷரிபா சோரா ஜபின் பவானியை இளக்காரமாகப் பேசியதோடு, அந்த நாடுகளில் இலவசக் கல்வி வழங்குகின்றார்கள் என்றால் அந்த நாட்டுக்கே போக வேண்டியதுதானே என்று பவானியை மட்டம் தட்டிப் பேசியுள்ளார்.

இந்த உரையாடல்கள் அடங்கிய ஒளிநாடா முகநூல் பக்கங்களின் வழியே பதிவேற்றம் செய்யப்பட்டது முதல் அசுர வேகத்தில் மலேசியா முழுக்க சுழல் முறையில் பரவி விட்டது. யூ டியூப் எனப்படும் ஒளிநாடா வலைத் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு  http://www.youtube.com/watch?v=CflYB49Z6fo என்ற முகவரியைக் கொண்ட இணையத் தளத்தில் இந்த உரையாடல்களைப் பார்க்க முடிகின்றது.

இதனைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கு விவாதத்தில் துணிகரமாக உரையாற்றிய பவானிக்கு ஆதரவாக மலேசியா முழுக்க ஆதரவு அலை பெருகி வருகின்றது.

Sharifah-Zohra-Jabeen1அதே சமயத்தில் சுவாரா வனித்தா தலைவி ஷரிபா (இடது பக்க படத்தில் உள்ளவர்) ஆணவத்தனமாக மட்டம் தட்டும் வகையில் பேசிய பேச்சு குறித்து பலத்த கண்டனக் குரல்கள் நாடு முழுமையிலும் எழுந்துள்ளன.