சென்னை – கடந்த 10 டிசம்பர் 2016-ஆம் நாள் மறைந்த ‘பன்முக ஆளுமை தமிழறிஞர்’ வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெறுகிறது.அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், தமிழ் இணையக் கல்விக் கழகம், அகாடமி ஆப் சயின்ஸ், உ.வே.சா நூலகம் மற்றும் சில நிறுவனங்கள், அமைப்புகளுடன் இணைந்து ‘கணித்தமிழ்ச் சங்கம்’ இந்த ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பழைய மாணவர்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் இயக்குனர்கள், ஊழியர்கள், கணித்தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைப்பினர், பாரதிய வித்யா பவன் அமைப்பினர், அகாடமி ஆப் சயின்ஸ் பேராசிரியர்கள், உ.வே.சா நூலக நிர்வாகிகள் ஊழியர்கள், தமிழ்க் கணிமை மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐயா சிறப்பாக செயல்பட்ட துணைவேந்தர் பதவி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்பணி, தமிழ் கவிதை மற்றும் புலமை, தமிழ் இணையக் கல்விக்கழகப் பணி, உ.வே.சா நூலகப்பணி போன்ற பல்வேறு பணிகள் தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் பங்கேற்று ஐயாவின் ‘பன்முக ஆளுமை’ பற்றி நினைவு கூற உள்ளார்கள்.
வருகிற டிசம்பர் 28ம் நாள் புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தின் ‘டேக்’ (TAG) அரங்கில் நடைபெறும் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஐயாவின் மேல் அன்பு கொண்டவர்களும், தமிழ் அன்பர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கணித் தமிழ் சங்கத் தலைவர் சொ.ஆனந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டம் சரியாக மாலை 4.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: சொ.ஆனந்தன், தலைவர், கணித்தமிழ்ச் சங்கம்,
செல்பேசி: 94440–75051