கோத்தா பாரு – கோத்தா பாரு விமான நிலையம் மற்றும் நீதிமன்றம் என இரண்டு இடங்களில் இன்று புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து அவசரமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இன்று காலை 11.40 மணியளவில் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்திற்கும், கோத்தா பாரு அமர்வு நீதிமன்றத்திற்கும் தொலைப்பேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதனையடுத்து, தீயணைப்புத் துறை மற்றும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளோடு அவ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு சந்தேகப்படும் படியான பொருட்கள் இல்லை என்பதை பிற்பகல் 2 மணியளவில் உறுதிப்படுத்தினர்.
அதே போல், பிற்பகல் 3.30 மணியளவில் விமான நிலையத்திலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் எந்த ஒரு பொருளும் இல்லை என்பது உறுதியானது.