Home Featured தமிழ் நாடு பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக் குழு – சசிகலா கலந்து கொள்வாரா?

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக் குழு – சசிகலா கலந்து கொள்வாரா?

614
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் அனைத்து ஊடகங்களின் பார்வைகளும் இன்று வியாழக்கிழமை பதியப் போவது இங்குள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தை நோக்கித்தான்!

காரணம்,இன்று அங்கு நடைபெறுவது அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம்!

sasikala-receiving-memosநேற்று தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளிகள் வழங்கிய மனுக்களை – அவர்களோடு தரையில் அமர்ந்து பெற்றுக் கொண்ட சசிகலா…

#TamilSchoolmychoice

அதில் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு பெறுவாரா – அதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழுமா – என்பதுதான் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனமுமாக தற்போது இருக்கின்றது.

முதல் கட்டமாக இன்றைய அதிமுக பொதுக் கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்வாரா – அல்லது கூட்டத்திற்கு வராமலேயே பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் சசிகலா தேர்வு பற்றி எதுவுமே வாய்திறக்கவில்லை. ஆனாலும், கட்சி முழுக்க முக்கியத் தலைவர்களின் எண்ண ஓட்டம், அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என்பதாகத்தான் இருக்கின்றது.

சிறு சிறு எதிர்ப்புகள் – சலசலப்புகள்

கட்சிக்கு வெளியிலிருந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார் போர்க்கொடி தூக்கி, சசிகலாவுக்கு எதிராக அறிக்கைகளும், பேட்டிகளும் கொடுத்து வந்தாலும், கட்சிக்குள் அதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், தீபாவின் சொந்த அண்ணனான தீபக் ஜெயகுமார், “சின்ன அத்தை” என்று கூறிக் கொண்டு சசிகலா பக்கம் நிற்பதும், அவரைத் தற்காப்பதும், சசிகலாவுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு தற்காப்பு அரண்.

sasikala-honouring-mgrடிசம்பர் 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தில், போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தும் சசிகலா…

ஜெயலலிதாவால் கட்சியிலிந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, மற்றொரு எதிர்ப்புக் குரல். நேற்று ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகம் சென்ற சசிகலா புஷ்பாவின் கணவரும் அவரது வழக்கறிஞரும் தாக்கப்பட்டதும், அவர்களுக்கு அதனால் இரத்தக் காயங்கள் ஏற்பட்டதும் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகியிருக்கின்றது.

இருப்பினும், இவையெல்லாம் கட்சிக்கு வெளியில் ஏற்படக் கூடிய நெருக்கடிகள்தானே தவிர, கட்சிக்குள், குறிப்பாக மூத்த, முக்கியத் தலைவர்களிடமிருந்து எந்தவித நெருக்கடிகளையும், சசிகலா இதுவரை சந்திக்கவில்லை.

சில சலசலப்புகள் அவ்வப்போது ஏற்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணம்: நேற்று அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்தராஜ் அறிவித்திருக்கின்றார். ஆனால், இதுவும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம், ஆனந்தராஜ் போன்றவர்களுக்கு அதிமுக பயன்பட்டதே தவிர, ஆனந்தராஜின் பிரச்சாரத்தால் அதிமுக வளர்ந்ததாக அறிகுறிகள் எதுவுமே இல்லை.

அடக்கி வாசிக்கும் மற்றொரு அதிமுக முகம் சம்பத். வைகோவின் போர்வாளாக ஒரு காலத்தில் செயல்பட்டு பின்னர் ஜெயலலிதாவின் போர்வாளாக அதிமுகவில் ஐக்கியமானவர். ஆனால், சசிகலா எதிர்ப்பால் கட்சியிலிருந்து வெளியேறுவாரா அல்லது பொறுத்துக் கொண்டு கட்சிக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாரா என்பது தெரியவில்லை.

இருப்பினும் சசிகலாவுக்கு கட்சிக்கு வெளியில் எதிர்ப்புகள் வலுக்கும் – அதிமுக அடிமட்ட உறுப்பினர்களிடையே – பொதுமக்களிடையே எதிர்ப்புகள் முளைக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்தகைய ஓர் உதாரணம், இசையமைப்பாளர்-இயக்குநரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன், சசிகலா தனது சொத்தை மிரட்டி வாங்கிக் கொண்டார் என பகிரங்கமாக அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகள்.

சசிகலாவின் செல்வாக்கைச் சிதறடிக்க எல்லா முனைகளிலும் திமுகவும் பாடுபடும். காரணம், பொதுச் செயலாளரான பின்னர் சசிகலா தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டால், மக்களிடையே செல்வாக்கு பெற்று விட்டால், அடுத்த முதல்வராகலாம் என்ற ஸ்டாலின் கனவுகளும் நொறுங்கிப் போகும்.

ஸ்டாலின் பாதை தெளிவானது

stalinஇத்தகைய சூழ்நிலைகளில், திமுகவைப் பொறுத்தவரையில், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படும் வேளையில், கட்சியின் பொருளாளராகவும் பதவி வகிக்கின்றார். அவர்தான் அடுத்த திமுக தலைவர் என்பது ஏற்கனவே தீர்க்கமாக முடிவான ஒன்று என்பதால், அந்தக் கட்சி வட்டாரங்களில் பரபரப்பு எதுவுமில்லை. எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக சூட்டப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இன்று சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு பெறுவது முடிவானதும், அடுத்த கட்டமாக அவர் ஜெயலலிதா மறைவால் காலியாகியுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அந்த இடைத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை தள்ளிப் போகலாம் என்பதால், பொதுச் செயலாளரான பின்னர், மாநில முதல்வராகப் பதவியேற்க அதுவரை காத்திருப்பாரா அல்லது அதற்கு முன்பாகவே, பதவியேற்பாரா என்ற கேள்விக்கு விடை காணவும் தமிழகம் காத்திருக்கின்றது.

sasikala-urged-by-peopleஜெயலலிதாவுக்குப் பதிலாக கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும் என நாள்தோறும் சசிகலாவைச் சந்தித்து அதிமுகவினர் வற்புறுத்தி வருகின்றனர்…

எப்போது சசிகலா முதல்வராவார்?

இந்திய அரசியலமைப்பு சட்டங்களைப் பொறுத்தவரையில், ஒருவர் மாநில முதல்வராக சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட மாநிலத்தின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே மாநில முதல்வராக ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.

1967-இல், தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருந்தார். சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. பின்னர்தான் சட்டமன்ற உறுப்பினராக இடைத் தேர்தலில் வழி தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராகத் தொடர்ந்தார்.

ஆனால், அவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகிக்காமல், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அடுத்த ஆறுமாதங்களுக்குள்ளாக, ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான், முதல்வர் பதவியைத் தொடர்ந்து வகிக்க முடியும்.

எனவே, மேலும் மூன்று நான்கு மாதங்கள், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே, பொதுச் செயலாளர் என்ற முறையில், கட்சியின் தலைமைத்துவத்தையும், தமிழக அரசின் தலைமைத்துவத்தையும் ஒரே நேரத்தில் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இப்படியாக, தமிழக அரசியலின் எதிர்கால நடப்புகளை மாற்றியமைக்கப்போகும் அதிமுக தொடர்பான சில முடிவுகளின் முதல் கட்டமாக, அமைகின்றது, இன்றைய அதிமுக பொதுக் குழுக் கூட்டம்.

சசிகலா, பொதுத் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அறிவிப்பு இன்று வெளியானவுடன் சசியின் அடுத்த அதிரடி ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்.

இதுவரை அவரது குரல் எப்படியிருக்கும் – அவரது மேடைப் பேச்சு – அல்லது உரைநடைப் பேச்சு எப்படியிருக்கும் என்பது கூட தெரிந்திராத – பார்த்திராத – தமிழகம் சசிகலாவின் அடுத்த அதிரடிக்காகக் காத்திருக்கின்றது என்பதுதான் தமிழ் நாட்டின் மிக ஆச்சரியமான அரசியல் மாற்றம்.

‘நாவால் நாடாண்டவர்கள்’ மத்தியில், தமிழ் நாட்டில் மேடைப் பேச்சுக் கலையில் வல்லவராக இல்லாவிட்டால், அரசியலில் முன்னுக்கு வர முடியாது என்ற பதிக்கப்பட்ட சித்தாந்ததை மாற்றியிருக்கின்றார் சசிகலா. இதுவரை, அவர் மேடையேறிப் பேசும் ஒரு காணொளி கூட காணக் கிடைக்கவில்லை.

இன்றைய அதிமுக பொதுக் குழுக் கூட்டம் அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது, சசிகலா என்ன செய்யப் போகிறார், என்ன பேசப் போகிறார், என்பதைக் காண அதிமுகவினர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் காத்திருக்கிறது.

-இரா.முத்தரசன்