சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மரணத்தில், தனிப்பட்ட முறையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியிருப்பதை அடுத்து, ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்களும், ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில், நேற்று வியாழக்கிழமை விசாரணை நடத்திய விடுமுறைக் கால நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து வெளியான செய்திகளில், அவர் நலமடைந்தார். உணவு சாப்பிட்டார். கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், திடீரென அவர் எப்படி உயிரிழந்தார்? அவரது மறைவுக்குப் பிறகாவது, மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், மரணத்துக்குப் பிறகு மருத்துவ அறிக்கைகளைக் கொடுக்க முடியாது என்பதால், ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து பரிசோதனை நடத்தவும் உத்தரவிடுவேன் என்றும் அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.
அதோடு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 9-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆளும் அரசின் மூடி மறைப்புகள்
இந்நிலையில் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆளும் அரசு வெளிப்படையாக நடந்திருந்தால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவர் மரணமடைந்த அதிகாரப்பூர்வத் தகவலைக் கூட மருத்துவமனை நிர்வாகம் தான் முதலில் வெளியிட்டது. அதன் பிறகே, தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கை வந்தது. மூடுமந்திரமான இத்தகைய செயல்பாடுகள் தான் மறைந்த முதல்வர் குறித்த மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் மக்கள் மத்தியில் தோன்றக் காரணமாகியுள்ளது. எனவே ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முழுமையான, வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு என்ன நோய்?
ஜெயலலிதா மரணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “உடல்நலக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டிருந்த நோய் என்ன ? அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? அவர் உடல் நிலையில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள், முன்னேற்றங்கள், பின்னடைவுகள் போன்றவற்றை அவ்வப்போது முறையாக வெளிப்படையாக அறிவிக்க மாநில அரசு தவறிவிட்டது”
“அரசு தனது கடமைப் பொறுப்பை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியது ஏன்? ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மரணமடைந்த 20 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யும் போது அவரது உடல் பதப்படுத்தப் பட வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகள் எழுகின்றன.”
“இப்போது உயர் நீதிமன்ற நீதிபதியும், இந்த வழக்கு வழக்கமான முறையில் என்னிடம் விசாரணைக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதிக்க உத்திரவிட்டிருப்பேன் என்று எச்சரித்துள்ளார். எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய முழு விபரங்களையும் தமிழக அரசு வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று முத்தரசன் கூறியுள்ளார்.