Home Featured நாடு “புத்தாக்க சிந்தனையோடு புதிய சமுதாயமாக உருவெடுப்போம்” – சுப்ரா

“புத்தாக்க சிந்தனையோடு புதிய சமுதாயமாக உருவெடுப்போம்” – சுப்ரா

800
0
SHARE
Ad

Subramaniam-feature

கோலாலம்பூர் – பிறந்திருக்கும் 2017 புத்தாண்டில் நமது கனவுகளையும் முயற்சிகளையும் நிறைவேற்ற நாம் அனைவரும் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு, புதியதொரு சமுதாயமாக உருவெடுக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சுப்ராவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம். பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாம் ஒவ்வொருவரும் நமது பங்கினை ஆற்ற வேண்டும். பல இனத்தவர்கள் வாழும் இந்நாட்டில் எல்லா மதத்தினரிடையேயும் நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மேலோங்க வேண்டும். ஒற்றுமை மேலோங்க அனைத்து இனத்தவர்களும் பிற இனத்தவர்களின் சமயம், கலாச்சாரம், இறைநம்பிக்கை அடிப்படையில் மிதவாதத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே ஒரு நாடு சுபிட்சமும் ஒற்றுமையும் அடைய முக்கிய அம்சமாகும்.

சவால்கள் நிறைந்த 2016-ஆம் ஆண்டு

2016-image2016ஆம் ஆண்டு மலேசிய நாட்டிற்கு மட்டுமின்றி உலகளாவிய நிலையில் பொருளாதார சவால்கள் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. நாட்டின் வருமான நிலை உயருவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் எண்ணெய் விலை, செம்பனை விலை, இரப்பர் விலைகள் அனைத்தும் குறைந்ததன் விளைவாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, அரசாங்கம் வகுத்த பலத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த முடியாத சூழலைக் காண நேர்ந்தது.

தொடங்கியிருக்கும் இந்த 2017ஆம் ஆண்டில், உலகச் சந்தையில், எண்ணெய், செம்பனை, இரப்பர் ஆகிய விலைகள் உயர்வு கண்டுள்ளது. இவையனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும். இதன்வழி, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துவதற்கு, மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலை ஆராய்ந்து படிப்படியாக அதற்குத் தீர்வு காண்பதற்கும் ஏதுவாக அமையும்.

சுகாதாரப் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள்….

kementerian_kesihatan_malaysiaதொடர்ந்து, 2016ஆம் ஆண்டு சுகாதார ரீதியில் நாடு பல சவால்களைச் சந்தித்தப் போதிலும், தற்பொழுது இச்சுகாதார பிரச்சனைகள் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மனத்திற்கு நிறைவை அளிக்கிறது. சுகாதார அமைச்சர் என்ற முறையில் நாட்டின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல உருமாற்றத் திட்டங்களை வகுத்து வருகிறோம். இந்த உருமாற்றத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே மிகச் சிறந்த சுகாதார விழிப்புணர்வைக் கொண்டு வரும் என்பதில் நான் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

பொதுமக்களின் ஆரோக்கியம், முதல் கட்ட சுகாதார சேவை (Primary Healthcare), மருத்துவ வசதிகள், தொற்றா நோய்கள் எண்ணிக்கையைக் குறைத்தல் என பல கோணங்களில் மருத்துவ திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சுகாதார உருமாற்றத்தின் வழியாக அடுத்தடுத்து வரும் காலங்களில் நிறைவான சுகாதார சேவைகள் தொடர்ந்து நிலைத்திருப்பதைச் சுகாதார அமைச்சு உறுதி செய்யும். அதன் அடிப்படையில், பிறந்திருக்கும் 2017 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஓர் ஆரோக்கியமான ஆண்டாகவும் அமைய வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து தங்கள் உடல் நலத்திலும் சுற்றுப்புறத் தூய்மையிலும் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

மஇகா முயற்சியில் சமுதாய மாற்றங்கள்…

MIC-logoஅடுத்ததாக, ம.இ.காவின் தேசியத் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியர்களின் நலனைக் கருதில் கொண்டு ம.இ.காவிலும் சில உருமாற்றத் திட்டங்கள் தேவையாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் சமுதாயத்தின் கல்வி தகுதியும் பொருளாதார தகுதியும் மேம்பாடு காணும் பொருட்டுத் துரிதமாகச் செயல்பட்டு, அதற்குரிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது தலையாய நோக்கமாகும்.

நான் முன்னமே கூறியது போல இந்தியச் சமுதாயம் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற வேண்டும். இந்தியர்களை நாடு தழுவிய நிலையில் சிறு தொழில் வியாபாரிகளாக உருவாக்குவதோடு, ஏற்கனவே இருக்கும் சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளோடு, சிறு தொழில், நடுத்தரவர்த்தகம், (SME) என அனைத்திலும் இந்தியர்கள் வியாபார நுணுக்கத்திறன் பெற்றிருக்க வேண்டும். அதனைக் கொண்டு நாட்டில் பல இந்திய தொழில் முனைவர்களை உருவாக்க வேண்டுமென்பதே ம.இ.காவின் நோக்கமாகும்.

தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்

tamil-school-studentsமேலும், தமிழ்ப்பளிகளின் வளர்ச்சி, தமிழ்க்கல்வியின் தேர்ச்சி, இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின் முன்னேற்றம், உயர்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என அனைத்திலும் உயர்நிலையை அடையக்கூடிய முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தை ஆக்ககரமான முறையில் செயல்படுத்த இந்தியர்களுக்கான தூரநோக்கு வரைவுத் திட்டமானது பல கலந்துரையாடல்களுக்குப் பின் வரையறுக்கும் நிலையில் உள்ளது. சமுதாயத்தைப் பிரதிநிதித்து இருக்கக்கூடிய பல முக்கியப் பிரமுகர்களின் கூற்றுகளை அலசி ஆராய்ந்திருக்கும் நிலையில் இவ்வரைவுத் திட்டமானது வரையறுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சமுதாயத்திற்குத் தயங்காமல் குரல் கொடுக்கும் நிலையைக் கட்சியில் உருவாக்க வேண்டும். கட்சியின் மீது நம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பும் இதுவே ஆகும். அந்த நோக்கத்தோடுதான் நாம் அனைவரும் நம் பங்கினை ஆற்ற வேண்டும். தற்பொழுது ம.இ.கா கட்சிக்குத் தேவையான வலு, பலம், உறுப்பினர்களிடையே இருக்கும் ஒற்றுமை அனைத்தும் மேலோங்கப்படவும் வேண்டும்.

அவ்வகையில், இந்த 2017ஆம் ஆண்டுக்கான நமது கனவுகளையும் முயற்சிகளையும் நிறைவேற்ற நாம் அனைவரும் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு; புதியதொரு சமுதாயமாக உருவெடுக்க வேண்டும்.

அவ்வகையில், மலேசிய வாழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, மலர்கின்ற ஆண்டு அனைவருக்கும் சிறந்ததோர் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.”