சென்னை – ஒரு கால் ஊனத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மாரியப்பன் பிரேசிலில் நடந்த அனைத்துல பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புரிந்த சாதனை உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
அந்த மாரியப்பன் தங்கவேலு அதற்காக தமிழக அரசிடமிருந்து 2 கோடி ரூபாய் பரிசும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு பெற்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி முதல் அனைத்து பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகின்றது. இந்தத் திரைப்படத்தை, ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தயாரிக்கின்றார்.
இந்தத் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை நேற்று ஜனவரி முதல் நாளில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். “மாரியப்பன்” என இந்தப் படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“இதோ திரைப்படமாகும் நமது சொந்த தேசிய வீரர் மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு கதையின் முதல் தோற்றம் – வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.