Home Featured நாடு மஇகா அல்லாத இந்தியர் கட்சிகளுக்கு தேசிய முன்னணி தொகுதிகள் ஒதுக்கப்படுமா?

மஇகா அல்லாத இந்தியர் கட்சிகளுக்கு தேசிய முன்னணி தொகுதிகள் ஒதுக்கப்படுமா?

925
0
SHARE
Ad

Logo-BNகோலாலம்பூர் – இந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறிய இந்தியர் அரசியல் கட்சிகள் மஇகாவோடு ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தார்.

இருப்பினும், அந்தஅறைகூவலை எந்த ஓர் அரசியல் கட்சியும், காதில் வாங்கிக் கொண்டதாகவோ, ஏற்றுக் கொண்டதாகவோ தெரியவில்லை. மாறாக, அந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்து இயங்கவே விரும்புவதாகத் தெரிகின்றது.

m sambanthanடத்தோ சம்பந்தன் தலைமையில் இயங்கும் ஐபிஎப் கட்சி பகிரங்கமாகவே நாங்கள் மஇகாவோடு இணைய மாட்டோம் என்று  அறிவித்துவிட்டது. மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் தலைமையில் உருவாகி இயங்கி வரும் கட்சி இது.

#TamilSchoolmychoice

ஆனால், ஐபிஎப் கட்சியின் ஒரு முக்கியப் பிரிவாக பினாங்கு மு.வீ.மதியழகன் தலைமையில் இயங்கும் பிரிவு மஇகாவோடு இணைவதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிகின்றது. எனினும் இதுகுறித்த முழுமையான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

மற்ற இந்தியர் கட்சிகளில் நிலைமை என்ன?

இதைத் தவிர்த்து, மற்ற சிறிய இந்தியர் கட்சிகள் என்று பார்த்தால் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் இயங்கும் மக்கள் சக்தி கட்சி, டான்ஸ்ரீ நல்லா தலைமையில் இயங்கும் மலேசிய இந்தியர் ஒற்றுமைக் கட்சி, ஆகியவை தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

இதில், டான்ஸ்ரீ நல்லாவுக்கு நாடாளுமன்ற மேலவை (செனட்டர்) உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டு அவரும் இரண்டு தவணைகள் அந்தப் பதவியை வகித்து வந்திருக்கிறார்.

மலேசிய இந்திய முஸ்லீம்களின் கட்சியான கிம்மா ஏற்கனவே, அம்னோவின் இணை கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றது. கிம்மாவுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அது அம்னோவின் முடிவாகத்தான் இருக்குமே தவிர, மஇகா தொகுதிகளை எடுத்து கிம்மாவுக்குக் கொடுக்க வாய்ப்பில்லை. மஇகாவும் ஒப்புக் கொள்ளாது.

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுக்கு மட்டும் என்றில்லாமல், வெற்றி வாய்ப்பு உள்ள மற்றவர்களுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே நிலவி வந்துள்ளது.

அதே போல, பல காரணங்களால் தேசிய முன்னணியில் அங்கம் பெற முடியாமல், ஆனால் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கி வரும் சிறிய இந்தியர் கட்சிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால், இந்த நடைமுறை சபா, சரவாக் மாநிலங்களில் மட்டும் பின்பற்றப்பட்டுள்ளதேயன்றி, தீபகற்ப மலேசியாவில் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைய உதாரணமாக, ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர் துணையமைச்சராகப் பதவி வகித்த சம்பவத்தைக் கூறலாம். தேசிய முன்னணியில் அதிகாரபூர்வமாக அங்கம் வகிக்காத அவர் நாடாளுமன்ற மேலவையிலும், அரசாங்கத்திலும் இடம் பெற்றார். ஆனால், பின்னர் தனது பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூறி தனது பதவிகளில் இருந்து விலகி விட்டார்.

ஆனால், இந்த முறை குறிப்பாக தேசிய முன்னணியை ஆதரிக்கும் இந்தியர் அரசியல் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

“தேசிய முன்னணியின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்” – தனேந்திரன்

Thanenthiiranநேற்று திங்கட்கிழமை பேராக் மாநில மக்கள் சக்தி கட்சியின் சார்பில் ஈப்போவில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மக்கள் சக்திக் கட்சித் தலைவர் தனேந்திரன் “இந்த முறை 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி எங்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். அதேவேளையில் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படாவிட்டாலும், தொடர்ந்து நாங்கள் தேசிய முன்னணியை ஆதரித்து வருவோம்” என்று கூறியதாக அஸ்ட்ரோ அவானி இணையத் தளத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

“எங்களின் கட்சியில் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதை முன்னிட்டு எங்களுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் வரும் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெல்வதுதான் முக்கியம்” என்றும் தனேந்திரன் கூறியுள்ளார்.

மஇகா தொகுதிகளை விட்டுக் கொடுக்குமா?

ஆனால், மஇகாவைப் பொறுத்தவரையில் நாடு முழுமையிலும் விரிவான, சிறப்பான கட்டமைப்பைக் கொண்ட கட்சி என்ற முறையில், தேசிய முன்னணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என்ற முறையில், தங்களின் உரிமைகளை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்றே கருதப்படுகின்றது.

MIC Logo 440 x 215

தற்போது தங்களின் கைவசம் உள்ள 9 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட மஇகா தயாராகி வருகின்றது.

பேராக் மாநிலத்தில் மட்டும் 2008-இல் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, ஒரு சட்டமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. மீண்டும் அந்தத் தொகுதியை மஇகா கோருமா அல்லது 3 தொகுதிகளில் மட்டும் மஇகா மீண்டும் போட்டியிடுமா என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.

மஇகா விட்டுக் கொடுத்த பேராக் மாநில சட்டமன்றத் தொகுதி மீண்டும் மஇகாவுக்கே வழங்கப்பட்டால், மஇகா போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் 19-ஆக இருக்கும். இல்லாவிட்டால் 18-ஆக இருக்கும்.

இந்தத் தொகுதிகள் அனைத்திலும் ஐந்து பேர் கொண்ட செயல் குழுக்களை மஇகா கடந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் நியமித்திருக்கின்றது. இதன் மூலம், கட்சி போட்டியிடும் தொகுதிகளில் முன்னேற்பாடுகளைச் செய்ய மஇகா தீவிரமாக செயல்களில் இறங்கிவிட்டது.

மஇகா போட்டியிடும் வாய்ப்புள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும், தொகுதித் தலைவர், ஒரு மத்திய செயலவை உறுப்பினர், இளைஞர், மகளிர் தலைவர்கள் என ஐந்து பேரைக் கொண்ட செயல்குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில தொகுதிகளை மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொண்டு விட்டுத் தரவும், அல்லது மாற்றிக் கொள்ளவும் மஇகா பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தங்களின் அரசியல் உரிமைகளை மேலும் இழக்கும் வண்ணம் அல்லது விட்டுக் கொடுக்கும் வண்ணம் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்காத எந்த ஓர் இந்தியர் கட்சிக்கும் மஇகா தனது தொகுதிகளை விட்டுத்தராது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்படியே, தொகுதிகளை விட்டுத் தந்தாலும், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் இன்னொரு கட்சிக்குத்தான், தேசிய முன்னணி ஒற்றுமை, வெற்றி வாய்ப்பு கருதி, மஇகா விட்டுக் கொடுக்குமே தவிர, தேசிய முன்னணியில் அங்கம் வகிக்காத ஒரு கட்சிக்கு தனது தொகுதிகளை விட்டுக் கொடுக்க மஇகா ஒருபோதும் சம்மதிக்காது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அதே சமயம், அம்னோ, மசீச, கெராக்கான் போன்ற கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள், இந்த தேசிய முன்னணியில் அங்கம் வகிக்காத இந்தியர் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால், அதற்காக மஇகா ஆட்சேபம் தெரிவிக்காது, மாறாக, ஆதரவுதான் தெரிவிக்கும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-இரா.முத்தரசன்