Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: கோடிட்ட இடங்களை நிரப்புக – பார்த்திபன், பார்வதியின் கதகளி ஆட்டம்!

திரைவிமர்சனம்: கோடிட்ட இடங்களை நிரப்புக – பார்த்திபன், பார்வதியின் கதகளி ஆட்டம்!

1074
0
SHARE
Ad

KIINகோலாலம்பூர் -படம் தொடங்கியது முதல் இது என்ன மாதிரியான படம்? பேய் படமா? காமெடிப் படமா? என்ற குழப்பத்திலேயே சில பல நிமிடங்கள் யோசிக்கத் தொடங்கிவிடுகின்றோம். இடைவேளை நெருங்கும் போது தான், அடடா..இது பார்த்திபனின் அக்மார்க் குண்டக்க மண்டக்க சேட்டைகள் நிறைந்த படம் என்பதை உணருகின்றோம்.

வாடகை சொகுசு கார் ஓட்டும் தொழில் செய்து வரும் பார்த்திபன், தன்னைவிட 20 வயது குறைவான கேரளத்துப் பெண்ணான பார்வதி நாயரை (மோகினி) திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். தன் மனைவியின் புட்டத்தில் தட்டிய ஒருவனின் விரலைக் கடித்துத் துப்பும் அளவிற்கு மனைவியை கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கிறார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிலம் ஒன்றை வாங்க இந்தியா வரும் சாந்தனுவை, தனது காரில் அழைத்துச் சென்று தனக்குத் தெரிந்த பங்களா ஒன்றில் தங்க வைக்கின்றார் பார்த்திபன். சாந்தனுவிற்கு தினமும் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவதற்காக தனது மனைவி மோகினியை அதே பங்களாவில் தங்க வைக்கிறார்.

#TamilSchoolmychoice

KNஅப்படித் தங்கிய சில நாட்களிலேயே மோகினி மோகத்திற்காக தினமும் ஏங்குவது சாந்தனுவிற்குத் தெரிய வருகின்றது. குடிநோயாளியான பார்த்திபனால், மோகினியின் ஆசைகளை தீர்க்க முடியவில்லை என்பதையும் அறிந்து கொள்கிறார்.

‘குடை நனையுறது தான் குடைக்குத் தெரியும்.. அதிலுள்ள கம்பி நனையாதது அந்தக் குடைக்குத் தெரியுமா?’ என்று சாந்தனுவிடம், மோகினியும் தனது ஆசையை அவ்வப்போது மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

தன்னை நம்பி வீட்டில் தங்க வைத்திருக்கும் பார்த்திபனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதா? கண் முன்னே காதலாகி கசிந்துருகி நிற்கும் பார்வதியின் ஆசையைத் தீர்ப்பதா? நிலத்தை வாங்கிவிட்டு வந்த வேலை முடிந்து வெளிநாடு செல்வதா? என்ற குழப்பத்தில் தவிக்கும் சாந்தனு எடுக்கும் முடிவுகள் என்ன? என்பது தான் கோடிட்ட இடங்களை நிரப்புக..

நடிப்பு

சாந்தனு நன்றாக நடித்திருக்கிறார். ஜிம்மிற்குப் போய் உடம்பை இறுக்கியிருப்பது தெரிகின்றது. என்றாலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் இடங்களில் எல்லாம் பார்த்திபனே கைதட்டல்களைத் தட்டிச் சென்றுவிடுகின்றார்.

“இங்க செல்ஃப் எடுக்குறதே கஷ்டமா இருக்கு? இதுல செல்ஃபி வேற எடுக்கணுமா?’ என்று பார்வதியிடம் கடிந்து கொள்வது, ‘நீ உன் பொண்டாட்டியவே மறந்துருவ.. இதுல நீ எப்படி என் பொண்டாட்டிய ஞாபகம் வச்சிருக்கப் போற?’ என்று தம்பி இராமையாவை குழப்புவது என பார்த்திபன் படம் முழுவதும் ஈர்க்கிறார்.

KIN1

அடுத்து, ரசிகர்கள் இருக்கையை விட்டு ஒரு நிமிடம் கூட நகர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கும் இயக்குநர் பார்த்திபன், பார்வதியை காட்சிக்குக் காட்சி கவர்ச்சியாக்கி, திரைக்கதையில் சுவாரசியங்களைக் கூட்டியிருக்கிறார். அதற்கு ஏற்ப பார்வதியின் நடிப்பும், அழகும் இப்படத்திற்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது.

மறதி நோயாளியாக தம்பி இராமையா படம் முழுவதும் வந்தாலும் கூட, நம்மை சிரிக்க வைக்கத் தவறி விடுகின்றார். அவரது கதாப்பாத்திரத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவு, இசை

KIIn2அர்ஜூன் ஜெனா ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. குறிப்பாக பங்களா காட்சிகள் அனைத்தும் கதைக்கு ஏற்ப பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த கதகளிக் காட்சி மிகவும் அருமை.

சத்யாவின் பின்னணி இசை இப்படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. காட்சிகளில் வீரியம் கூட்டுவதற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. ‘யாரைக் கேட்டு’, ‘ கிளுகிளுப்பையாய்’, ‘டுமுக்காத்தான்’ ஆகிய பாடல்கள் மிகவும் அருமை.

KNDமொத்தத்தில், நூலிழை தவறியிருந்தாலும் கூட, இப்படம் ‘அந்த’ மாதிரி படம் என்று பெயரெடுத்திருக்கும். ஆனால் பார்த்திபன் இராதாகிருஷ்ணன் தனது சினிமா அனுபவத்தால், அதனை நன்கு உணர்ந்து, நூலிழை கூட தவற விடாமல் அதை குட்டு (Good) படம் என்ற பார்வையிலேயே ரசிகனைப் பார்க்க வைத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார்.

என்றாலும், இடைவேளைக்குப் பின்னால், கிளைமாக்ஸ் நெருங்கும் போதே பலரால், முடிவை கணித்து விட முடிவது படத்தின் பலவீனம்.

அதனால், பார்த்திபனின் இந்த வியூகம் எல்லா இரசிகர்களையும் ஈர்க்குமா? என்பது சந்தேகமே..

-ஃபீனிக்ஸ்தாசன்