Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘ராயிஸ்’ – இரண்டாம் பாதி இழுவை! ஷாருக்கானின் நடிப்பு அருமை!

திரைவிமர்சனம்: ‘ராயிஸ்’ – இரண்டாம் பாதி இழுவை! ஷாருக்கானின் நடிப்பு அருமை!

920
0
SHARE
Ad

Raeesகோலாலம்பூர் – சிறுவயதில் பள்ளிக்குச் செல்லக் கூட வழியில்லாமல் வறுமையில் வாடும் ராயிஸ் (ஷாருக்கான்), தனது பகுதியில் சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் அதுல் குல்கர்னியிடம் வேலைக்குச் சேர்கிறார்.

எந்தத் தொழிலும் தாழ்ந்தது இல்லை. அது மத்தவங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அதை விட உயர்ந்த தொழில் வேறு எதுவும் இல்லை என்று தனது தாய் கூறியதை தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு வளர்ந்து இளைஞர் ஆகிறார் ராயிஸ்.

வேலை செய்தது போதும், இனி சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் முதலாளி அதுல் குர்கர்னியிடம் தனது ஆசையை ராயிஸ் தெரிவிக்க அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சினை.

#TamilSchoolmychoice

முதலாளியை எதிர்த்து தொழில் செய்து அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய சாராய வியாபாரியாக மாறுகிறார் ராயிஸ். தோள் கொடுக்க பால்ய நண்பனும், துணை நிற்க அன்பு மனைவியும் இருக்க ராயிசின் ராஜ்ஜியம் அந்த வட்டாரத்தில் மெல்ல உயர்கிறது.

உயரம் தொட தொட பிரச்சினைகளும் பெரிதாக, அரசியல், போலீஸ் என இரண்டையும் சமாளித்து தனது பகுதி மக்களுக்கு நல்லதை செய்யும் ராயிஸ், இறுதியில் வஞ்சகத்தால் எவ்வளவு பெரிய விளைவை சந்திக்கிறார் என்பதே பிற்பாதி சுவாரசியம்.

நடிப்பு

562572-raeesராயிஸ் கதாப்பாத்திரத்தில் ஷாருக்கான் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முடிந்து வெளியே வரும் போது ஷாருக்கானை மறந்து ராயிசை நினைக்கிறோம் என்பதே அந்த கதாப்பாத்திரத்திற்கும், ஷாருக்கானின் நடிப்பிற்கும் கிடைத்த வெற்றி. தனது சோடாபுட்டி கண்ணாடியைப் பார்த்து கிண்டலடிப்பவர்களை யோசிக்காமல் அடித்து நொறுக்குவதும், தனது மக்களை நினைத்து கண்ணீர் வடிப்பதுமாக அற்புதமான நடிப்பு.

ராயிசின் மனைவி ஆஷியா கதாப்பாத்திரத்தில் பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் நடித்திருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சியும், அனுபவமும் நன்கு வெளிப்படுகின்றது. தனது கணவரின் துயரம் கண்டு கலங்கும் காட்சிகளில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் ராயிசின் தோழனாக வரும் சாதிக் கதாப்பாத்திரமும் படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கின்றது.

அடுத்ததாக படத்தில் நம்மை பெரிதும் ஈர்ப்பது மஜ்முதார் என்ற போலீஸ் அதிகாரி தான். நவாசுதின் சித்திக் என்பவர் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

FotorCreated-104இவர்களோடு ஒரு கவர்ச்சிப் பாடலில் சன்னி லியோன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

திரைக்கதை

raees-trailer-review-0001சட்டவிரோதமாக சாராய வியாபாரம் செய்யும் ராயிஸ் தனது தொழிலையும் வளர்த்து, அரசியல் தலைவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களை சமாளித்து, எதிரிகளை எப்படி வீழ்த்துகிறான் என்பது தான் கதையின் சுவாரசியங்கள்.

ஆனால் இயக்குநர் ராகுல் தோலாக்கியா அதனை திரைக்கதையாக்கியிருக்கும் விதம், ஏற்கனவே பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என இந்தியாவில் பல மொழிகளில் பார்த்துப் பழகிய ஒன்று என்பதால், அடுத்தடுத்த காட்சிகளை எளிதியில் யூகித்துவிடுகின்றோம். அது இப்படத்தின் மிகப் பெரிய பல்வீனம். ஆனால் இந்த பலவீனத்தை ஷாருக்கான் தனது நடிப்பால் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவது தான் படத்தின் மிகப் பெரிய பலம்.

தமிழ் சினிமா ரசிகர்கள், அட போங்கப்பா இத நாங்க பல வருஷங்களுக்கு முன்னால, ‘நாயகன்’ படத்திலேயே பார்த்துவிட்டோமே என்று சொல்லும் அளவிற்கு காட்சிகளில் அவ்வளவு பழமை.திரைக்கதையில் கொஞ்சம் வித்தியாசங்கள் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதோடு, படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Raees-Trailer-Download-HD-Mp4என்றாலும், படம் முழுவதும் வரும் அந்த ‘பேட்டரி’ கிண்டல், மஜ்முதார் கதாப்பாத்திரத்தின் வியூகங்கள், அரை கப் டீ  போன்றவை ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவு, இசை

கே.யு.மோகனன் ஒளிப்பதிவில் குஜராத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் அத்தனையும் மிக அழகாகப் பதிவாகியுள்ளன. 80 -களில் நடக்கும் கதை என்பதால் அதன் சூழலுக்கு ஏற்ப வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு.

ராம் சம்பந்த் பின்னணி இசை ஓகே.. பாடல்களில் ‘லைலா மெயின் லைலா’ எழுந்து ஆட்டம் போட வைக்கின்றது.

மொத்தத்தில், ‘ராயிஸ்’ – இரண்டாம் பாதி இழுவை! ஷாருக்கானின் நடிப்பு அருமை!

-ஃபீனிக்ஸ்தாசன்