கியூபெக் (கனடா) – கனடாவின் கியூபெக் நகரில் உள்ள ஒரு பள்ளி வாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கியூபெக் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தி கனடா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் கறுப்பு ஆடை அணிந்த இரண்டு துப்பாக்கித் தாக்குதல்காரர்கள், பள்ளி வாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். அந்தக் கூட்டத்தில் குழந்தைகளுடன் குடும்பமாக பலர் இருந்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு பேர் இதுவரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவன் பள்ளி வாசலுக்கு அருகில் கைது செய்யப்பட்டான். மற்றொருவன் அருகிலிருந்து நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்டான்.
கனடாவில் பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் மையமாக கியூபெக் மாநிலம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றது. இங்கு பிரெஞ்சு மொழி முக்கிய மொழியாகப் பேசப்படுகின்றது.