சென்னை – (மலேசிய நேரம் மாலை 5.45 மணி நிலைவரம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது பெயரை பதவி விலகியுள்ள ஓ.பன்னீர் செல்வமே கூட்டத்தில் முன் மொழிந்தார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வழி மொழிந்தனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின்போது பிரதான மேடையில் சசிகலாவுடன், ஓ.பன்னீர் செல்வம்
அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலைமை, இந்தியாவின் அனைத்து அரசியல் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி அதிமுகவின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழக ஆளுநர் தற்போது சென்னையில் இல்லாத காரணத்தால், அவரது வருகைக்காக அதிமுக தலைமை காத்திருக்கிறது. ஆளுநர் சென்னைக்கு வந்ததும், சசிகலா அவரைச் சந்தித்து அடுத்த முதல்வராகப் பதவியேற்பதற்கான உரிமையைக் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், போயஸ் கார்டன் இல்லத்தின் முதல் மாடிக்கு (பால்கனி) ஜெயலலிதா பாணியில், பச்சை நிறப் புடவையில் வெளியில் வந்த சசிகலா, வெளியே காத்திருந்த அதிமுக தொண்டர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்து, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பாணியில், இரட்டை விரல் காட்டினார்.
பின்னர் அங்கிருந்து, அதிமுக தலைமையகம் நோக்கி சென்ற சசிகலா, அங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது அருகில் ஓ.பன்னீர் செல்வமும் அமர்ந்திருந்தார்.
-செல்லியல் தொகுப்பு