Home Featured நாடு சோதிநாதன் நியமனத்திற்கு பரவலான வரவேற்பு!

சோதிநாதன் நியமனத்திற்கு பரவலான வரவேற்பு!

1132
0
SHARE
Ad

Sothi---Featureகோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்று முடிந்த மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 600 கிளைகளுடன் மீண்டும் மஇகாவுக்கு சோதிநாதன் திரும்பியது முதல் கட்சி வட்டாரங்களில் இந்த நியமனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எப்போது என்பதுதான் கேள்வியாக இருந்தது.

நேற்றைய மத்திய செயலவைக் கூட்டம் அந்தக் கேள்விக்கு விடை தந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

யாருக்குப் பதிலாக நியமனம்?

மஇகா  தேசியத்தலைவருக்கு 9 மத்திய செயலவை உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை மஇகாவின் அமைப்பு விதி வழங்கியிருக்கின்றது. ஆனால், ஏற்கனவே, 9 பேர் நியமிக்கப்பட்டுவிட்டதால், யாரை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக டாக்டர் சுப்ரா சோதிநாதனை நியமிப்பார் என்ற ஆரூடங்கள் மஇகாவில் நிலவி வந்தன.

ஏற்கனவே, மத்திய செயலவையின் நியமன உறுப்பினராக இருக்கும், சுபாங் தொகுதியின் முன்னாள் தலைவர் என்.கிருஷ்ணனுக்குப் பதிலாகத்தான் சோதிநாதன் நேற்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.

MIC logoபுதிய கிளைகள் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு துணைக் குழு ஒன்றும் நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவுக்குத் தலைவராக டாக்டர் சுப்ராவே இருப்பார். துணைத் தலைவராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் அனைத்து மஇகா மத்திய செயலவைக் கூட்டங்களுக்கும் அழைக்கப்படுபவராக கிருஷ்ணன் இருப்பார் என்றும், அவர் தாராளமாக மத்திய செயலவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றும் சுப்ரா மத்திய செயலவையில் அறிவித்ததாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

சோதிநாதனுக்கு பரவலான வரவேற்பு

நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் சோதிநாதனும் கலந்து கொண்டிருக்கிறார். மத்திய செயலவையில் இடம் பெறுவதன் மூலம், அவரது அனுபவமும், அரசியல் கருத்துகளும், பங்களிப்பும் கட்சிக்கு மீண்டும் கிடைப்பது ஆரோக்கியமான ஒன்று என்பதோடு, இதன் மூலம் கட்சியின் ஒற்றுமையும் வலுப்படும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் மஇகா தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு அரசியல் செயலாளராக இருந்த சோதிநாதன் 2001-ஆம் ஆண்டில் தெலுக் கெமாங் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் மஇகா அரசியலில் முன்னணிக்கு வந்தார்.

அதைத் தொடர்ந்து அரசாங்கத்தில் துணையமைச்சராகவும் பதவி வகித்தார். கட்சியில் தலைமைச் செயலாளராகவும், தேசிய உதவித் தலைவராகவும், பணியாற்றியிருக்கிறார்.

மலாயாப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறையில் முதல் நிலைத் தேர்ச்சியோடு (First Class Honours) பட்டம் பெற்ற சோதிநாதன் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.