Home Featured தமிழ் நாடு “சசிகலாவை நியமிக்க முடியாது” – ஆளுநர் அதிரடி!

“சசிகலாவை நியமிக்க முடியாது” – ஆளுநர் அதிரடி!

583
0
SHARE
Ad

sasikala-governor-9 feb

சென்னை – அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வராக நியமிக்க முடியாது என்றும் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு வரவிருக்கும் சூழ்நிலையிலும், அதிமுக சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி சிறைப்பிடித்து வைக்கப்பட்டார்கள் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையிலும் சசிகலாவை முதல்வராக நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடிவெடுத்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ள ஓர் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக இந்தியா டுதே செய்தித் தளம் கூறுகிறது. ஆனால், அத்தகைய ஓர் அறிக்கை அனுப்பப்படவில்லை என உள்துறை அமைச்சு மறுத்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆளுநர் மாளிகையின் சார்பில் அதன் பொது உறவு அதிகாரியும் இத்தகைய குறிப்பு எதனையும் ஆளுநர் உள்துறை அமைச்சுக்கு அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனக்குப் பதிலாக மற்றொருவரை அதிமுக சார்பிலான முதல்வராக நியமிக்கவும் சசிகலா தயாராகி வருகிறார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பில் மேலும் சில அண்மையச் செய்திகள் பின்வருமாறு:-

  • ஓ.பன்னீர் செல்வம், தான் இன்னும் அதிமுக பொருளாளராகத் தொடர்வதாகக் கூறி அதிமுக வங்கிக் கணக்கிலிருந்து தனது அனுமதியின்றி வேறு யாரும் பணத்தை எடுக்க முடியாது என்றும் அந்த வங்கிக் கணக்கை இயக்கக் கூடாது என்றும் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
  • அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள மதுசூதனன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அவரை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • தமிழகத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் கலந்தாலோசித்துள்ளார்.
  • சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை, கூவாத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசோர்ட் உல்லாச தங்கும் விடுதியில் கட்டாயத்தின் பேரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையில் பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் காவல் துறை அந்த உல்லாச விடுதியை முற்றுகையிடலாம் என்ற பரபரப்பும் நிலவுகின்றது.

-செல்லியல் தொகுப்பு