Home Featured தமிழ் நாடு மீண்டும் கூவத்தூர் நோக்கி சசிகலா! பன்னீருக்கு இதுவரை 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மீண்டும் கூவத்தூர் நோக்கி சசிகலா! பன்னீருக்கு இதுவரை 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

733
0
SHARE
Ad

sasikala-panner-

சென்னை – (மலேசிய நேரம் மாலை 6.30 மணி நிலவரம்)  “ஒரு பெண்மணி அரசியலில் ஈடுபடுவது என்பது மிகச் சவாலான ஒன்று. ஜெயலலிதா அனுபவித்த சவால்களை நான் பார்த்திருக்கிறேன். அதே போன்ற நெருக்கடிகள் எனக்கும் தரப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற சலசலப்புகளெல்லாம் எனக்கு புதிதல்ல. இதற்காக நான் அஞ்சி பின்வாங்கப் போவதுமில்லை. ஏற்கனவே, இதுபோன்ற பிரச்சனைகளை அம்மாவுடன் இணைந்து சந்தித்துள்ளேன். இவற்றிலிருந்து மீண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம்” என்று சூளுரைத்த சசிகலா, இன்று மாலை மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் கூவத்தூர் கோல்டன் பே உல்லாச விடுதி நோக்கி பயணமானார்.

நடந்து வரும் அரசியல் பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாஜகவும், திமுகவும் செயல்படுவதாகவும் அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

“நீங்கள் என்னை முதல்வராக நியமிக்காவிட்டால், எனது மரணத்திற்கு நீங்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்” என ஆளுநருக்குத் தான் எழுதியதாக, இணையத் தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் கடிதம் போலியானது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தையும்  பத்திரிக்கையாளர்களிடம் காட்டினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக்குப் பின்னர் சசிகலா சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பன்னீர் செல்வம்-சசிகலா போராட்டம் தொடர்பில் இதுவரையிலான மேலும் சில செய்திகள்:

  • மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வம் பக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை இணைந்துள்ளதைத் தொடர்ந்து, இதுவரையில் அவருக்கான ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
  • அதிமுகவில் முக்கிய பேச்சாளர்களாக செயல்பட்டு வந்த நடிகர்கள் இராமராஜன், தியாகு, ஆகியோரும் இன்று பன்னீர் செல்வத்தைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
  • ஏற்கனவே அதிமுகவிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்த நடிகர் ஆனந்தராஜ், நடக்கின்ற அரசியல் நடப்புகளைப் பார்க்கும்போது, அடுத்த ஆட்சி அமைக்க வேண்டியது யார் என்ற முடிவை மக்களிடமே ஒப்படைப்பதுதான் நல்லது என்றும் அதற்காக மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
  • ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் செவிலி (நர்ஸ்) பிரமிளா என்பவர் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
  • நாளை திங்கட்கிழமை திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு