சென்னை – நேற்று பரபரப்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கிடையில், கூவத்தூரிலிருந்து புறப்பட்டு மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தார் சசிகலா.
அப்போது அங்கிருந்த கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய போது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகத்தை மேற்கோள் காட்டி, அதன்படி இருப்போம் என்று கூறினார்.
எங்கிருந்தாலும், அதிமுக தொண்டர்களின் நினைவுகளோடு இருப்பேன் என்றும் சசிகலா உருக்கத்தோடும், கண்ணீரோடும் கூறினார்.
இன்று புதன்கிழமை அவர் பெங்களூர் சென்று சிறைச்சாலையில் அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விண்ணப்பம், அத்தகைய விண்ணப்பத்தின் முடிவு தெரியும் வரை தனக்கு தற்காலிக விடுதலை வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற கோணங்களில் தனது சட்டப் போராட்டத்தைத் தொடர்வார். எனினும், இதுபோன்ற சட்டப் போராட்டங்களில் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக, சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீதான மறு சீராய்வு மனு சமர்ப்பிக்கப்படும் என சசிகலா தரப்பில் செயல்படும் தம்பித்துரை புதுடில்லியில் கூறியுள்ளார்.
இறுதிக் கட்ட முயற்சியாக, சசிகலாவின் உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் சிறைச்சாலையில் அனுமதிக்கப்படுவதை, ஒத்தி வைக்கப்படும் மனுவை அவரது வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
-செல்லியல் தொகுப்பு