சென்னை – தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று புதன்கிழமை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு நிலவி வரும் வேளையில், மக்களவைத் துணைத் தலைவரும் சசிகலா ஆதரவாளருமான தம்பிதுரை பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவின் உடல் நிலையைக் காரணம் காட்டி, அவர் சிறையில் அனுமதிக்கப்படுவதை ஒத்திப் போட தம்பிதுரை சட்டரீதியான முயற்சிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தொடர்பிலான மேலும் சில அண்மையச் செய்திகள் வருமாறு:
- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்தார். அவரது சந்திப்பு சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
- அந்த சந்திப்பைத் தொடர்ந்து, பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் இருவரும் தமிழக ஆளுநருடன் சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடத்தினர்.
- இதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பினரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா அல்லது சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி, எந்தத் தரப்புக்கு அதிக பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அந்தத் தரப்பை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- மத்திய அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி, சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூட்டி, யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை உறுதி செய்து அந்தத் தரப்பின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென தமிழக ஆளுநருக்கு சட்ட ஆலோசனை, வழங்கியுள்ளார்.
- இதற்கிடையில், ஓ.பன்னீர் செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 20 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கியுள்ளார்.
- ஆனால் அவர் எங்களை நீக்குவதற்கு அவருக்கு அதிகாரமில்லை என பன்னீர் செல்வம் குழுவினர் அறிவித்துள்ளனர்.
- சட்டமன்ற உறுப்பினர்களில் பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் என ஓரிருவர் மட்டுமே அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாறாக, பன்னீர் செல்வம் பக்கம் சேர்ந்து ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை நீக்கப்படவில்லை. இதிலிருந்து அவர்களை மீண்டும் சசிகலா தரப்பு இழுக்க வியூகம் வகுக்கப்படுகிறது என கருதப்படுகிறது.
- குறிப்பாக, ஆளுநர் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், அந்த சமயத்தில் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் சசிகலா தரப்பில் வியூகங்கள் வகுக்கப்படுவதாக கணிக்கப்படுகின்றது.
- அதே போன்ற வியூகத்தை பன்னீர் செல்வம் தரப்பினரும் கையாள்கின்றனர். இதுவரை 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ள வேளையில் கூவத்தூர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டால் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் பக்கம் சாயலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
- நேற்று கூவத்தூர் சென்ற பன்னீர் செல்வம் ஆதரவு அமைச்சர் பாண்டியராஜனுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- தொடர்ந்து கூவத்தூர் பகுதியில் யாரும் நுழைய முடியாதபடி 144 தடை உத்தரவை காவல் துறை அமுல்படுத்தியுள்ளது.
- ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று பன்னீர் செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சந்தித்துக் கொண்டதை அடுத்து, தீபா, பன்னீர் செல்வம் இல்லம் சென்றார். அங்கு, அவருக்கு பன்னீர் செல்வத்தின் மனைவி ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றார்.
-செல்லியல் தொகுப்பு