பெங்களூரு – இங்குள்ள பரப்பன்ன மத்திய சிறைச்சாலையில் நீதிபதியிடம் சரணடைந்த சசிகலா அங்கு 2 எண் கொண்ட அறையில் அடைக்கப்பட்டார்.அவருடைய கைதி எண் 9435 என்பதாகும்.
இதனைத் தொடர்ந்து அவரது அரசியல் போராட்டம் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
இனி அவரது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் மறு சீராய்வு மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு முடிவு தெரியும்வரை அவர் சிறைக்குள் இருக்க நேரிடலாம்.
அதே வேளையில் மறு சீராய்வு மனு மீதான விசாரணையின் தீர்ப்பு வரும்வரை அவர் சிறைக்கு வெளியே இருக்கும் வகையிலான மனுவும் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக முதல்வராகும் அவரது கனவுகள் இன்றைய நிலையில் தகர்க்கப்பட்டிருப்பினும், கட்சியைப் பொறுத்தவரை இன்னும் பொதுச் செயலாளராகத் தொடரும் அவர் வலுவுடன் திகழ்கின்றார்.
தன் நிலையை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் தனது உறவினர் டிடிவி தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.
இந்த நியமனத்தால் சசிகலா குடும்பத்தினர் மீதான வெறுப்பும், அதிருப்தியும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், கட்சி சசிகலாவின் குடும்பக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.
அதேசமயம், பன்னீர் செல்வம் உட்பட பல முக்கியத் தலைவர்களை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார் சசிகலா.
சட்ட ரீதியாகவோ, தேர்தல் ஆணையத்துக்கு மனுச் செய்வதன் மூலமாகவோ, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற முடிவை பன்னீர் செல்வம் தரப்பினர் பெற்றால் மட்டுமே, சசிகலாவின் குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுகவை விடுவிக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இனி இரண்டு விதமான சட்டப் போராட்டங்களை சசிகலா சிறைக்குள் இருந்து எதிர்நோக்க நேரிடும்.
முதலாவது தனது சொந்த விடுதலைக்காகப் போராடுவது!
இரண்டாவது, பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றத் தொடங்கப் போகும் சட்டப் போராட்டத்தை எதிர்த்துப் போராடுவது!
சசிகலா இரண்டிலும் வெல்வாரா? அல்லது ஏதாவது ஒன்றில் மட்டும் வெல்வாரா?
அல்லது இரண்டிலும் தோல்வியடைவாரா?
அடுத்து வரும் வாரங்களில், அல்லது மாதங்களில் போகப் போக இந்த சட்டப் போராட்டங்களில் தெளிவு பிறக்கும்.
ஆனால், இன்றைய நிலையில், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் அறிமுகமாகிவிட்ட அரசியல் சக்தியாக சசிகலா உருவாகியிருக்கிறார்.
அவர் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொட்டப்படும் அதே அளவுக்கு, அதிமுக தொண்டர்களிடையே அவர் மீதான அனுதாபமும் பெருகியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
மறைந்த ஜெயலலிதாவுக்காக சசிகலா சிறைக்கு செல்கிறார் என்றும் ‘அம்மாவுக்காக’ அவர் செய்யும் இறுதித் தியாகம் இது என்றும் அதிமுகவினரால் பார்க்கப்படுகின்றது.
அந்த அனுதாபங்களின் பின்னணியில் மீண்டும் அவர் அரசியலில் வலம் வரமுடியுமா?
காலம்தான் பதில் சொல்லும்!
-செல்லியல் தொகுப்பு