சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) சசிகலா சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்னரும், தமிழக அரசியலின் குழப்பம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது. அதற்குக் காரணம், தமிழக ஆளுநர் வித்யாசாகர் இன்னும் ஒரு முடிவு எடுக்காமல் இழுத்தடிப்பதுதான் என சட்ட வல்லுநர்கள் அதிலும் குறிப்பாக சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் இன்று இரவு (இந்திய நேரப்படி) 7.30 மணிக்கு சசிகலா தரப்பினரால் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் அவரது குழுவினரையும் ஆளுநர் சந்தித்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியின் சார்பில் வந்த அமைச்சர் ஜெயகுமார், 124 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இரவு எட்டரை மணிக்கு ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது குழுவினரையும் ஆளுநர் சந்தித்துள்ளார்.
இந்தியா முழுமையிலுமிருந்து சட்ட வல்லுநர்களும், அரசியல்வாதிகளும் ஆளுநரின் கால தாமதத்தை கண்டித்து வரும் வேளையில், ஆளுநர் இன்னும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றார்.
அநேகமாக ஆளுநர் நாளை வியாழக்கிழமை முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்றும் அதுதான் அவர் முன் இருக்கும் சட்ட ரீதியான சிறந்த முடிவு என்றும் பெரும்பாலான சட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்திய அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் வழங்கியுள்ள ஆலோசனைப்படி, சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி, யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிர்ணயிக்கும்படியும் ஆளுநர் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-செல்லியல் தொகுப்பு