கோலாலம்பூர்,ஜன.16- நமது பராம்பரிய கலைகள் குறித்து அறிந்து வைத்திருக்கிறோமா என்றால் இல்லை என்ற பதிலே நம்மிடம் இருந்து வெளிப்படும். காரணம் சில பராம்பரிய கலைகள் மறக்கப்பட்டு விட்ட வேளையில், பல பராம்பரிய கலைகள் மறைக்கப்பட்டு விட்டது என்றே கூற வேண்டும்.
மறந்து போன, மறைக்கப்பட்ட கலைகளை மீண்டும் மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்ட்ரோ வானவில் ஏற்பாட்டில் “பொங்கு தமிழ்” என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
கெடா, சிலாங்கூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தப்பட்ட வேளையில் ஆஸ்ட்ரோ பணியாளர்களும் காண வேண்டும் என்ற காரணத்தால் ஆஸ்ட்ரோ வானவில் வளாகத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொங்கு தமிழ் நிகழ்வு குறித்து ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவின் தலைவர் டாக்டர் ராஜாமணி கூறுகையில், பொழுது போக்கு நிகழ்வுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் கல்வி, சமய, கலாச்சார நிகழ்விற்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறோம். அந்த வகையில் இளைஞர்கள் நமது பராம்பரியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல நிகழ்வுகளை படைத்து வருகிறோம். அதில் ஒன்றுதான் பொங்கு தமிழ் நிகழ்ச்சி.
கோலாட்டம், பொய்கால் குதிரை, மயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட 13 வகையான நமது பராம்பரிய கலைகளை பொங்கு தமிழ் மூலம் மக்கள் அறிந்துள்ளனர். கலைகள் மட்டுமல்லாமல் பராம்பரிய உணவுகளின் மகத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்படுவதோடு 16 வகையான பராம்பரிய உணவுகளை தயாரித்து நிகழ்ச்சியை காண வந்த ஆஸ்ட்ரோ நேயர்களுக்கு வழங்கினோம் என்றார். 50 கலைஞர்கள் இந்த பொங்கு தமிழ் நிகழ்வில் பங்கேற்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.