கோலாலம்பூர், ஜனவரி 16 – உத்தாரா பல்கலைக் கழக கருத்தரங்கில் ஒன்றில் நடந்த வாக்குவாதங்கள் இணையத் தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் சூறாவளி வேகத்தில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து 1மலேசியா சுவாரா வனிதா அமைப்பின் தலைவி ஷரிபா சோரா ஜபின் என்ற பெண்மணிக்கு எதிரான கண்டனக் குரல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உரிய பேச்சுரிமை கொடுக்காமல் அவர்களை மட்டம் தட்டியும், தான்தான் எல்லாம் தெரிந்தவர் என்பது போலவும் ஷரிபா அந்த கருத்தரங்கில் பேசியுள்ளார்.
“நான் சொல்வதைக் கேள்” என அடிக்கடி கூறி பவானியின் பேச்சை இடைமறித்து, பவானி சொல்ல வந்த ஒரு உண்மையான நடப்பு பிரச்சனையை, அனைத்து மலேசியர்களுக்கும் நன்மை பயக்கும் ஒரு கல்வி விவகாரத்தை விவாதத்திற்கு விடாமல் துண்டித்தது அநாகரிக செயல் என்பதை பலர் தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, பல்கலைக் கழகம் வரை இலவச கல்வி என்ற உன்னதமான கோரிக்கையை, யாருக்கு பிரச்சனையில்லை, மிருகங்களுக்கும்தான் பிரச்சனை இருக்கின்றது என மிருகங்களோடு ஒப்பிட்டு ஷரிபா பேசியதும் அவருக்கு கண்டனத்தைத் தேடித் தந்துள்ளது.
பெர்சே இயக்கத்தையும், அம்பிகா சீனிவாசனையும் சம்பந்தமில்லாமல் ஷரிபா தாக்கிப் பேசியுள்ளதும் மக்களிடையே வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.
இதற்கிடையில் நேம்வீ என்ற பெயரில் யூ டியூப் தளத்தில் ஏற்கனவே பிரபலமான ஒருவர், ஷரிபா பேசிய விவகாரங்களை அப்படியே உல்டா செய்து பேசியுள்ளதும் பிரபலமாகி பரவத் தொடங்கியுள்ளது.
மிஸ்டர் பை என்று பெயர் கொடுத்திருக்கும் ஒருவர் “கேளுங்கள்” (Listen) என்ற தலைப்பில் பாடல் ஒன்றையும் யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மிருகங்கள் பற்றி புகார் கொடுக்க முகநூல்
இதற்கிடையில் ஷரிபாவின் கருத்தைத் தொடர்ந்து மலேசியாவில் மிருகங்களைப் பற்றி புகார் கூறலாம் என கிண்டலாக முகநூல் பக்கம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தப் பக்கத்திற்கு நான்காயிரம் பேருக்கும் மேலாக “விருப்பம்” என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த விவகாரத்தின் மூலம் எப்படியோ பவானி என்ற மாணவி ஒரே நாளில் மலேசியா முழுக்க பிரபலமான நட்சத்திரமாகி விட, ஷரிபாவோ ஒரே ஒளிநாடாவின் வழி வில்லியாகி விட்டார்.