சென்னை – இன்று புதன்கிழமை புதுடில்லி புறப்பட்டுச் சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அவசர சந்திப்பாக இந்தியத் தேர்தல் ஆணையர் நசிம் சைடியை தனக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? அல்லது, சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் மட்டும் இரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகள் தமிழக அரசியலில் எழுந்திருக்கின்றன.
ஓபிஎஸ் தரப்பு வழங்கிய புகார் கடிதத்தைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சசிகலா தரப்பிலும் விளக்கக் கடிதம் வழங்கப்பட்டிருக்கின்றது.
நாளை வியாழக்கிழமை மார்ச் 16-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினரை தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்து, ஆர்.கே.நகர் தேர்தலின் முடிவுகளும் அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று புதன்கிழமை புதுடில்லியிலிருந்து தேர்தல் ஆணையம் என்ன கூறப்போகிறது என்பதற்காக தமிழக அரசியல் வட்டாரம் காத்திருக்கிறது.