பெய்ஜிங் – சீனாவின் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்குவா பல்கலைக்கழகம், தமது புதிய மாணவர்களுக்கு விதிமுறை ஒன்றை அறிவித்திருக்கிறது.
இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு முன்பு, அவர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நீச்சல் பரீட்சையில் எப்படி தேர்வு பெறுவது என்பதைக் கற்க வேண்டும் என்ற புதியக் கட்டுப்பாட்டை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தவிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேரும் மாணவர்கள், நீச்சல் பரீட்சையிலும் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை பரீட்சையில் தோல்வியடைந்தால், நீச்சல் பயிற்சியில் இணைய வேண்டும் என்று பல்கலைக்கழகம் கூறுவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
நீச்சல் பரீட்சையில், ஏதாவது ஒரு நீச்சல் முறையில், 50 மீட்டர் வரையில் மாணவர்கள் நீந்திக் காட்ட வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது.
இது குறித்து அப்பல்கலைக்கழகத் தலைவர் ஷியூ யோங் கூறுகையில், உயிர் காக்கும் திறன்களில் நீச்சலும் மிக அவசியமான ஒன்று. இந்த புதிய நடவடிக்கை மாணவர்களின் உடல் பலத்தையும் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
பல்கலைக்கழகத்தின் இந்த அறிப்பால், கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் உள்ளிட்ட பல்வேறு நட்பு ஊடகங்களில் சீனர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
சிலர் பல்கலைக்கழகத்தின் முடிவை ஆதரித்து புகழ்ந்தாலும், சிலர் இது போன்ற கட்டுப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இதற்கு முன்பு கடந்த 1919-ம் ஆண்டு, சிங்குவா பல்கலைக்கழகத்தில் இந்தக் நீச்சல் விதி அமலில் இருந்திருக்கிறது. பின்னர், அது தளர்த்தப்பட்டு, முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது. தற்போது மீண்டும் அதே விதியை அப்பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.