Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘கவண்’ – பொய்மை ஊடகத்தின் முகத்திரையை சலிப்பு ஏற்படும் அளவிற்கு கிழிக்கிறது!

திரைவிமர்சனம்: ‘கவண்’ – பொய்மை ஊடகத்தின் முகத்திரையை சலிப்பு ஏற்படும் அளவிற்கு கிழிக்கிறது!

826
0
SHARE
Ad

Kavan1கோலாலம்பூர் – இன்றைய காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களால் அசுர பலத்துடன் களத்தில் இருக்கும் ஊடகங்கள் நினைத்தால், எந்த ஒரு நிஜத்தையும் பொய்யாக்க முடியும், எப்படிப்பட்ட பொய்யையும் நிஜமாக்க முடியும் என்பதை அப்பட்டமாகச் சொல்லியிருக்கும் படம் தான் ‘கவண்’

ஆகாஸ் தீப் நடத்தி வரும் ‘ஜென் ஒன்’ என்ற தனியார் தொலைக்காட்சியில் புதிதாக வேலைக்குச் சேர்கிறார் விஜய்சேதுபதி (திலக்), அங்கு ஏற்கனவே தனது முன்னாள் காதலி மடோனா செபாஸ்டின் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, சேனல் வாசலில் நடக்கும் சம்பவம் ஒன்றை தனது கைப்பேசியில் பதிவு செய்து, முதலாளியிடம் காட்டி நல்ல பெயர் எடுத்து விடுகிறார்.

ஊடகத்துறையில் நேர்மையுடன் செயல்பட்டு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று அங்கு வேலை செய்ய ஆரம்பிக்கும் விஜய்சேதுபதிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அதாவது அந்தத் தொலைக்காட்சி, செய்திகளில் இருந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும், டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்கிறது. அதோடு, அந்த ஊரின் மிக மோசமான அரசியல்வாதியான போஸ் வெங்கட்டை தேர்தலில் வெற்றியடையச் செய்ய அவரை அப்துல் கலாம் அளவிற்கு புகழ் பாடுகிறது.

#TamilSchoolmychoice

இதனால் ஆத்திரமடையும் விஜய் சேதுபதி, நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பிரச்சனையை ஏற்படுத்தி, தொலைக்காட்சியின் பெயரைக் கெடுத்துவிட, உடனடியாக அவரை வேலையில் இருந்து தூக்கியெறிந்து வெளியே அனுப்புகிறது. விஜய் சேதுபதியுடன் அவரது காதலி மடோனா செபாஸ்டின், ஜகன் ஆகியோரும் வெளியாகிவிடுகின்றனர்.

அதே ஊரில் திவாலான தொலைக்காட்சி ஒன்றை விடாப்பிடியாக நடத்தி வரும் டி.ராஜேந்தரிடம், சேரும் விஜய்சேதுபதியும் அவரது நண்பர்களும், அங்கிருந்த படி, ‘ஜென்ஒன்’ தொலைக்காட்சியின் வண்டவாளங்களையெல்லாம் எப்படி பொதுமக்களுக்குத் தெரியப் படுத்துகிறார்கள் என்பது தான் படத்தின் சுவாரசியம்.

ரசிக்க

விஜய் சேதுபதி தான் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். சம்பவங்களையெல்லாம் தனது கைப்பேசியில் யாருக்கும் தெரியாமல் பதிவு செய்வது, “ஐயோ சார்.. நிகழ்ச்சி என்ற பேர்ல நாமெல்லாம் ஒரு மீளாவட்டத்துக்குள்ள சுத்திட்டு இருக்கோம்” என்று வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே முதலாளிக்கு அறிவுரை வழங்குவது என அசத்தல் நடிப்பு. மடோனாவுடனான காதலிலும் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

முகபாவனைகளில் அதிகம் கைதட்டல் வாங்குகிறார் மடோனா செபாஸ்டின். அதைத் தவிர படத்தில் அவர் நடிப்பதற்கான காட்சிகள் குறைவு. பல இடங்களில் அவரது சொந்தக் குரல் உறுத்துகிறது.

மோசமான அரசியல்வாதியாக போஸ் வெங்கட்டின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பது, பேட்டி என்றவுடன் நிதானத்திற்கு வருவது என நிஜ அரசியல்வாதிகள் ஒரு சிலரின் சாயலாக அப்படியே திரையில் தெரிகிறார்.

டி.ஆர் இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. முத்தமிழ் தொலைக்காட்சி நிறுவனராக படம் முழுவதும் பல குரல்களில் அடுக்குமொழி பேச வைத்திருக்கிறார்கள். என்றாலும், வழக்கமாக டி.ஆரிடம் இருக்கும் ஒரு ஈர்ப்பு இதில் காணவில்லை.

ஒரு நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க ஊடகங்கள் என்னவெல்லாம் செய்கின்றன. எப்படிப்பட்ட நாடகங்களையெல்லாம் அரகேற்றுகின்றன என்பதை ஒரு சில காட்சிகளில் ஒளிவு மறைவின்றி காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. உதாரணமாக, சிறுவனை அழ வைக்க, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கன்னத்தில் அறைவதெல்லாம், சேனல்களை டிஆர்பி  என்ற ஒன்று படுத்தும் பாட்டை நன்றாகவே காட்டுகிறது.

Kavan3சுபா, கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்திற்கு மிகவும் கைகொடுத்திருக்கின்றன. அதில் பல வசனங்கள், நட்பு ஊடகங்களில், பொய்யான ஊடகங்களுக்கு எதிராக சராசரி மனிதர்களின் கேள்விகள் தான்.

“யோவ்.. அந்த பொண்ண அவன் ஒரு தடவை தான் கற்பழிச்சான். ஆனா செய்திங்கிற பேர்ல நீ தான்யா அந்தப் பொண்ண பலமுறை கற்பழிக்கிற”

“ஏண்ணா.. இப்படிப்பன்ன? என் முகத்தை டிவில காட்டி வியாபாரம் பண்ணிட்டியேண்ணா. அவங்க கெட்டவங்களா தான் எனக்கு கொடுமை பண்ணாங்க. நீ நல்லவனா வந்தியேண்ணா” – போன்ற வசனங்கள் எதார்த்தம்.

அதோடு, எம்பட்டட் ஜார்னலிசம், சதா உசேன் குற்றவாளியாக்கப்பட்ட விதம் ஆகியவைப் பற்றிய சிறு குறிப்புகள் புதுமை.

அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு பெரும்பாலும் உள்அரங்கிலேயே காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. ஊடகங்கள் பற்றிய படம் என்பதால், அதற்கு ஏற்ற மாதிரியான ஒளிப்பதிவைச் செய்ய முயற்சி செய்திருக்கிறார். உதாரணமாக,’ஆக்சிஜன் தந்தாயே’ பாடல் காட்சி, கைப்பேசியில் பதிவு செய்திருப்பது போல் லேசான அலையோட்டமாக இருப்பது அருமை. என்றாலும், கே.வி.ஆனந்தின் அந்த தனித்துவம் இல்லை என்றே சொல்லலாம்.

ஹிப்ஹாப் ஆதியின் இசை பரவாயில்லை. ஆனால் அதிலும் கே.வி.ஆனந்த் படத்தில் வரும் வழக்கமான கவர்ந்திழுக்கும் பாடல்கள் இல்லை. ஹேப்பி நியூயர் பாடல் மட்டும் டி.ஆர் குரலில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

சலிப்பு

முதல் பாதி முழுக்க, முகத்தில் அறைந்தார் போல் ஊடகம் பற்றிய விளக்கங்களும், அதிலுள்ள வியாபார நுணுக்கங்களும் இடம்பெற்றிருக்கின்றன. திரைக்கதையின் முழு கவனமும் அதில் தான் இருக்கிறது. அதனால் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் தோற்றத்தைத் தராமல், ஒரு சேனல் ஒன்றின் நடவடிக்கைகளை இரகசியக் கேமரா வைத்துப் படம் பிடித்தது போல், இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.கதையே சொல்லாமல் நிகழ்ச்சி, டாக் ஷோ வைத்தே ஓட்டியிருக்கத் தேவையில்லை.

இரண்டாம் பாதியில், சரி எதையோ முக்கியமாகச் சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால், ஏற்கனவே பல படங்களில் மேலோட்டமாகச் சொல்லப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள் ஏரியில் கலக்கும் பிரச்சனையை இதிலும் சொல்லியிருக்கிறார்கள். எனவே பார்த்துப் பழகிய காட்சிகளால் சலிப்பு தான் ஏற்படுகிறது.

Kavan2சேனலைத் தவிர மக்களை அடைய வேறு வழிகளே இல்லாதது போல் காட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் சூழலில் சேனலை விட, பேஸ்புக், யுடியூப் போன்ற நட்பு ஊடகங்கள் அதிவிரைவில் மக்களைச் சென்றடைகின்றன என்பதை இயக்குநர் கே.வி.ஆனந்த் படத்தில் எங்குமே ஒரு சிறு காட்சியில் கூட காட்டாதது ஏனென்று தெரியவில்லை. உதாரணமாக, ‘ஜென் ஒன்’ சேனலில் இருந்து வெளியே வரும் சேதுபதி, ஒரு யுடியூப் சேனல் ஆரம்பித்தாலே போதுமே. கையில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சும்மா இருப்பது ஏன்?

‘நீயா நானா’ கோபிநாத், ரங்கராஜ் பாண்டே என்று நிஜப் பெயர்களைச் சொல்லி, படம் பார்ப்பவர்களின் மனநிலையை தொடக்கம் முதல் ‘லைவ்’ ஆகவே கொண்டு வந்துவிட்டு, திடீரென கடைசிக் காட்சிகளில் மட்டும் சினிமாத்தனமாக, காரை மரத்தில் மோதவிடுவது, துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து சர்வசாதரணமாக தப்பிப்பது என விஜய்சேதுபதி அண்ட் கோவை பல சாகசங்கள் செய்ய வைத்திருப்பது நம்பும் படியாக இல்லை. இப்படியாகப் படத்தில், பல குறை, நிறைகள் உள்ளன.

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில், வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களான ‘அயன்’, ‘கோ’ ஆகியவற்றை எடுத்துக் கொண்டால், அதில் இருந்த, புதுமையும், காட்சிகளில் இருந்த பிரம்மிப்பும், காதலில் இருந்த ஈர்ப்பும், பாடலில் இருந்த புத்துணர்ச்சியும் ‘கவண்’ கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

– ஃபீனிக்ஸ்தாசன்