ஹாங் காங் – திறன்பேசியில் (செல்போன்) விளையாட்டு மற்றும் காணொளிகள் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட சீனாவைச் சேர்ந்த 14 வயது பெண், தொடர்ந்து தலை குனிந்த நிலையில் திறன்பேசியைப் பார்த்து, தனது கழுத்துப் பகுதியை நிரந்தரமாகச் சேதப்படுத்திக் கொண்டுவிட்டார்.
சீனாவின் ஷாண்டாங் நகரிலுள்ள உள்ள ஷிண்டாவ் பகுதியில் வசித்து வரும் அப்பெண்ணுக்குத் தற்போது கழுத்துப் பகுதியை நேராக நிமிர்த்தவே முடியவில்லை. காரணம், கழுத்து எலும்பு குனிந்த நிலையிலேயே இறுகிப் போய்விட்டதாக, எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தனது மகள் செல்போனில் ஏதாவது செய்து கொண்டு தலையைக் குனிந்த நிலையிலே தான் இருப்பார் என்றும், எவ்வளவு அறிவுரை கூறியும் கேட்காமல் அதிலேயே பழகிப் போய்விட்டதாகவும் அப்பெண்ணின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் ஓரளவு குணமாகியிருக்கிறார் என்றாலும், மீண்டும் அப்பெண் அதே நிலையில், செல்போனைப் பயன்படுத்தத் தொடங்கினால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.