கோலாலம்பூர் – மலேசியாவில் கமல்ஹாசன் ரசிகர்களால், கடந்த 2013-ம் ஆண்டு,”மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்” என்ற பெயரில் புதிய அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, அதன் தலைவர் இந்திரன்சாகரன் தலைமையில், இரத்த தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள சேவைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.
அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கிள்ளான் ஜெயண்ட் புக்கிட் திங்கியில், இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் பல்லினத்தவர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதோடு, மருத்துவ முகாமிலும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை இம்முகாம் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில், “பல இனத்தவரும் பங்கு கொண்ட நம் மலேசிய இயக்கத்தின் இரத்த தான முகாம் 35 வருடங்களாக இதைச் செய்து வரும் நம்மியக்கத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட நற்பணி இயக்கப் பணிகள் தற்போது அனைத்துலக அளவில் நடைபெறுவது மிகவும் பெருமைக்குரிய விசயம் என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்ற நடிகர்களுக்கெல்லாம் ரசிகர் மன்றங்கள் உருவான காலக்கட்டத்தில், தன்னை ரசித்து ஒன்று சேர்ந்த இளைஞர்களை நற்பணி இயக்கமாக இணைத்து இன்று வரை அதன் மூலம் பல்வேறு நற்பணிகளைச் செய்து வருபவர் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் பேஸ்புக்