Home Featured நாடு ஒரே நாளில் ‘அரசியல் முகம்’ மாறிய கேமரன் மலை!

ஒரே நாளில் ‘அரசியல் முகம்’ மாறிய கேமரன் மலை!

719
0
SHARE
Ad

subra-mic-camerons (12)கேமரன் மலை – கடந்த சில வாரங்களாக, மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அடிக்கடி கேமரன் மலைக்கு வருகை தந்து, இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சி சார்பாக நான்தான் போட்டியிடுகின்றேன் எனத் தன்னிச்சையாகக் கூறி வந்தததைத் தொடர்ந்து, அந்தப் பிரதேசத்தின் குளிரையும் தாண்டி, அரசியல் வெப்பம் சில புள்ளிகள் கேமரன் மலையில் உயரத் தொடங்கியிருந்தன.

மஇகா இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்காது, மீண்டும் இங்கேயே போட்டியிடும் என மஇகா சார்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், விடாப்படியாக கேவியஸ் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்.

subra-mic-camerons (10)மஇகா ஒன்று கூடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவரை – தனது தொழிலை மறக்காத வண்ணம் – மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கிறார் சுப்ரா…

#TamilSchoolmychoice

தொகுதிப் பரிமாற்றங்கள், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையே  வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அதற்கான பேச்சு வார்த்தைகள், திரைமறைவில், மிகவும் சுமுகமான முறையில்தான் பொதுவாக நடைபெறும். பல்வேறு அரசியல் ரீதியான காரண காரியங்கள் ஆராயப்பட்டுத்தான் இறுதியில் தேசிய முன்னணித் தலைவரான பிரதமர் எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்ற முடிவை எடுப்பார்.

subra-cameron-hosp-patient-15042017தானா ராத்தா மருத்துவமனை வருகையின்போது நோயாளியின் நலம் விசாரிக்கிறார்…

ஆனால், தேசிய முன்னணியின் இத்தகைய அணுகுமுறைக்கும், சகோதரத்துவத்துக்கும் மாறாக, முரட்டுத் தனமாகவும், முரண்பாடான முறையிலும், பொதுத் தேர்தலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான கேமரன் மலைக்கு கேவியஸ் கோரிக்கை விடுத்த விதமும், அதைத் தொடர்ந்த அவரது நடவடிக்கைகளும் குழப்பத்தையும், கேமரன் மலை தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையில் நெருக்கடிகளையும் ஏற்படுத்தின.

சுப்ராவின் கேமரன் மலை வருகை

subra-cameron-temple-6-15052017கேமரன் மலை போ தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில்…துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணியுடன் ஆலய மரியாதை…

இதன் காரணமாக, நேரடியாகக் களத்தில் இறங்கும் விதமாக, சனிக்கிழமை ஏப்ரல் 15 தொடங்கி இரண்டு நாட்களாக கேமரன் மலைக்கு வருகை தந்து வரிசையாக மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டதோடு, மஇகா கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்காது, மீண்டும் அங்கேயே போட்டியிடும் என, திரளான தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளும், சகோதர இனத்தவர்களும் கலந்து கொண்ட ஒன்று கூடும் நிகழ்ச்சியில் பகிரங்கமாக அறிவித்தார் டாக்டர் சுப்ரா.

subra-blue valley-cameron-indian hall-stone lay (5)புளூ வேலித்தோட்ட இந்தியர் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அரசாங்க மான்யத்தை வழங்குகிறார் சுப்ரா…

ஒரே நாளில் கேமரன் மலையின் அரசியல் முகம் இதனைத் தொடர்ந்து மாறியிருப்பதோடு, அந்தத் தொகுதியின் மஇகா உறுப்பினர்கள், ஆதரவாளர்களிடையே உற்சாகமும் கரைபுரண்டோடுகின்றது.

கேவியசின் அணுகுமுறையால் அவரே தனக்குப் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்கின்றனர் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள்.

subra-transformasi india-SITF-Camerons (6)இந்தியர்களுக்கான அமைச்சரவைக் குழு சார்பாக நடத்தப்பட்ட இந்தியர் உருமாற்ற நிகழ்ச்சியில் சுப்ரா…

வலுக்கட்டாயமாக, கேவியஸ் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, மைபிபிபியை விட பலம் பொருந்திய கட்சியான மஇகா வீறு கொண்டெழுந்து மீண்டும் கேமரன் மலையைத் தற்காக்க அனைத்து முனைகளிலும் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றது எனவும், சுப்ராவின் வருகையால் இந்தத் தீவிரம் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன என்கின்றன மஇகா வட்டாரங்கள்.

அதனைப் பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்தன சுப்ராவின் பன்முக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்.

இரண்டு நாட்கள் – 7 நிகழ்ச்சிகள் 

subra-cameron-orang asli camp (3)பூர்வ குடியினருக்கான மருத்துவ முகாமில் சுப்ரா…

தனது முதல் நிகழ்ச்சியாக சனிக்கிழமை காலை கேமரன் மலை தானா ராத்தாவில் உள்ள சுல்தானா ஹாஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு வருகை தந்த சுப்ரா, சுகாதார அமைச்சர் என்ற முறையில் அம்மருத்துவமனையின் தரத்தையும், வசதிகளையும் உயர்த்தும் சில அறிவிப்புகளைச் செய்தார்.

அடுத்து, ‘போ’ தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில் கலந்து கொண்டு, அங்கு திரண்டிருந்த திரளான இந்திய சமூகத்தினரைச் சந்தித்தார்.

subra-kuala terla-4-கோலதெர்லா தமிழ்ப்பள்ளி வருகையின்போது மாணவர்களுடன்…

அப்போது, தனது அதிகாரபூர்வப் பட்டியலில் இல்லாத நிகழ்ச்சி என்றாலும், ‘போ 1’ தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு, அப்பள்ளியின் தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வருகையளித்தார். பள்ளியின் நிலவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

supra-futsal-15042017-5புட்சால் போட்டிகளைத் தொடக்கி வைக்கிறார்…

அடுத்து, விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தப்பட்ட புட்சால் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று, அந்த விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்து, விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்கள் பங்கு பெற வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்.

தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்

subra-cameron-tamil school- teachersகேமரன் மலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது…

நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுப்ரா கேமரன் மலையில் உள்ள ‘போ 1’ தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு சனிக்கிழமை வருகை தந்ததோடு, இரண்டாம் நாள் கோலதெர்லா தமிழ்ப் பள்ளிக்கும் வருகை தந்து அங்கு மாணவர்களைச் சந்தித்ததோடு, பள்ளியின் நிலவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

subra-cameron-tamilschool-15042017-3சுப்ராவுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட கேமரன் மலை தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்…

அதுமட்டுமின்றி, தனது முதல் நாள் வருகையின்போது, கேமரன் மலையிலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களோடும் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார் சுப்ரா. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் தரப்பு விவரங்களையும், கேமரன் மலையிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் நிலவரங்களையும் சுப்ரா நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த மஇகா எடுத்த முயற்சிகளையும் அதன் காரணமாக, தற்போது தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்திருப்பதையும் அவர் ஆசிரியர்களிடம் சுட்டிக் காட்டினார்.

கேமரன் மலை தொகுதி மஇகாவுக்கே! அம்னோவும் உடன்பாடு!

subra-mic-camerons (17)ஒன்று கூடும் நிகழ்ச்சியில், கேமரன் மலை மஇகாவுக்கே என அறிவித்தார் சுப்ரா….

சுப்ராவின் இரண்டு நாள் வருகையின் முத்தாய்ப்பாகவும், உச்சகட்ட அரசியல் நிகழ்ச்சியாகவும் சனிக்கிழமை இரவு மஇகா சார்பில் அனைத்து இனங்களோடும் நடத்தப்பட்ட ஒன்று கூடும் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா, மஇகா கேமரன் மலையில் மீண்டும் போட்டியிடும், மற்ற எந்த தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிக்கும் விட்டுக் கொடுக்காது என்று மீண்டும் வலியுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரன் மலை அம்னோ தலைவரும், கேமரன் மலை நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஜெலாய் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹாஜி வான் ரோஸ்டி, கேமரன் மலையில் மீண்டும் மஇகா போட்டியிடுவதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

subra-camerons-mic-11-15042017சகோதர இனத்தவர்களுடன் – ஒன்று கூடும் நிகழ்ச்சியில்…

தனது இரண்டாவது நாள் வருகையின் முதல் நிகழ்ச்சியாக புளூ வேலி தோட்டத்தில் இந்தியர் சங்க மண்டபம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சுப்ரா அந்த மண்டபத்திற்கான அரசாங்க மான்யமாக 10 இலட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் உரையாற்றும்போது வெளியிட்டார்.

கேமரன் மலை வாழ் இந்தியர்களுக்காக, எஸ்ஐடிஎஃப் எனப்படும் இந்தியர்களுக்கான அமைச்சரவை நடவடிக்கைக் குழுவினரால் நடத்தப்பட்ட உருமாற்றத் திட்ட கருத்தரங்கிலும் சுப்ரா கலந்து கொண்டார்.

subra-cameron-mic-other race leaders-15042017கேமரன் மலை வாழ் மக்களில் கணிசமான பிரிவினர் பூர்வ குடியினர். அவர்களின் நலன்களுக்காக சுகாதார அமைச்சால் நடத்தப்பட்ட மருத்துவ முகாமுக்கு வருகை தந்ததோடு, தனது இரண்டு நாள் வருகையை நிறைவு செய்தார் சுப்ரா.

அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளாக அமைந்ததும், மக்களின் குறை கேட்கும், குறைதீர்க்கும் நிகழ்ச்சிகளாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

subra-cameron-mic-3-15042017மற்ற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த மஇகா தலைவர்களுடன் ஒன்று கூடும் நிகழ்ச்சியில்…

அவரது இரண்டு நாள் வருகையின்போது, கட்சியில் பல முக்கியத் தலைவர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்து, மஇகாவின் ஒற்றுமையையும், வலிமையையும் எடுத்துக் காட்டியதோடு, கேமரன் மலையில் மீண்டும் மஇகா போட்டியிடும் என்ற அறிவிப்புக்கு வலு சேர்த்தனர்.

மஇகா தேசியத் துணைத் தலைவரும், கேமரன் மலையின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், நடப்பு பிரதமர் துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும் சுப்ராவோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

subra-cameron-temple-3-15042017

இரண்டு நாட்களில், இடைப்பட்ட ஓய்வு நேரங்களில் பல அரசியல் சந்திப்புகளும், மஇகா தலைவர்களுடனான சந்திப்புகளும் நிகழ்ந்தன என்றும் தெரிவிக்கின்றனர், சுப்ரா வருகையின்போது உடனிருந்த மஇகா வட்டாரங்கள்!

குறிப்பாக,

முன்னாள் மஇகா தேசியத் தலைவரும், நடப்பு கேமரன் மலையின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் ஆதரவாளர்களும், அவருக்கு நெருக்கமான மஇகாவினரும், சுப்ராவின் வருகைக்கு ஒத்துழைப்பு தந்ததோடு, தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளைச் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, தொடர்ந்து மஇகாவுக்காகவும், தேசிய முன்னணிக்காகவும், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காக்க உறுதிப்பாடு கொண்டுள்ளனர் – சுமுகமான முறையில் சுப்ராவோடு பேச்சு வார்த்தைகள் நடத்தி இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்கின்றன உள்ளூர் மஇகா வட்டாரங்கள்!

ஆக,

சுப்ராவின் வருகையால், ஒரே நாளில் கேமரன் மலையின் “அரசியல் முகம்” மாறிவிட்டிருக்கின்றது – மஇகாவினரிடையே புதிய உத்வேகமும், உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது – என்றும் மஇகா வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன!

-இரா.முத்தரசன்