கோலாலம்பூர் – மாயமான சமூக சேவகர் பீட்டர் சோங், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, தாய்லாந்தில் இருந்து மலேசியாவுக்குத் திரும்பினார்.
இந்நிலையில், அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், மாயமான ஆயர் ரேமண்ட் கோவைத் தேடுவதற்காக தான் தகவல்கள் சேகரித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், ஆயர் ரேமண்ட் கோ குறித்தத் தகவல்கள் பீட்டர் சோங்கிடம் இருந்தால் அதனை ஏன் அவர் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
“அவரிடம் உண்மையாகவே மாயமான ஆயர் பற்றிய தகவல் இருந்தால், அவர் ஏன் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை? தனிப்பட்ட முறையில், குடும்பத்தினர் உட்பட யாரிடமும் சொல்லாமல், எதற்காக அவர் அங்கு சென்றார் (தெற்கு தாய்லாந்து)? அவர் என்ன விசாரணை அதிகாரியா?” என்று காலிட் கேள்வி எழுப்பினார்.
பீட்டர் சோங் திடீரென மாயமானது அவரது குடும்பத்தினர் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் காலிட் தெரிவித்தார்.
சமூக சேவகரும், முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான பீட்டர் சோங்கைக் காணவில்லை என கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.