லஹாட் டத்து – கடந்த வாரம் அபு சயாஃபின் முக்கியத் தலைவன் முவாமார் அஸ்காலி என்ற அபு ராமி, பிலிப்பைன்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த அமைப்பின் மிகப் பெரிய கடத்தல் திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
அதிகளவு வெளிநாட்டினர் வருகை புரியும் சுற்றுலாத் தளமான சபாவில், 20-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கடத்த அபு சயாஃப் திட்டமிட்டிருந்தது உளவுத்துறை விசாரணையில் தெரியவந்திருப்பதாக ‘தி ஸ்டார்’ செய்தி கூறுகின்றது.
கடத்தப்படும் சுற்றுலாப் பயணிகளை வைத்து பிணைத்தொகை கேட்கவும், தங்களைக் குறி வைத்து பிலிப்பைன்ஸ் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலைத் தடுக்க அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தவும் அந்தத் தீவிரவாத அமைப்பு திட்டிருக்கிறது. ஆனால் அபு ராமி கொல்லப்பட்டதால், அந்த திட்டம் தற்போது செயலிழந்திருப்பதாக நம்பப்படுகின்றது.
எனினும், மலேசியா – பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாட்டு இராணுவத்தினரும் எல்லையில் மிகவும் எச்சரிக்கை நிலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.