சென்னை – இரட்டை இலையை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, நேற்று திங்கட்கிழமை அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தினகரன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாகப் பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று திங்கட்கிழமை இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில், அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இக்கூட்டத்தில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர். அப்பேச்சுவார்த்தையில் தினகரன் கைது செய்யப்படும் பட்சத்தில் இரு அணிகளும் இணைந்து அதிமுக-வை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இரு அணிகளும் இணைவதற்கு அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஏற்கனவே ஓ.பி.எஸ், தம்பிதுரை ஆகியோர் ஏற்கனவே கூறியிருப்பதால், இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவையும் சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.