சென்னை – தினகரனைக் கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக முதல்வர் பழனிச்சாமி அணி நாடகமாடுவதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி குற்றம் சாட்டியிருக்கிறது.
தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமானால், தாங்கள் கேட்கும் சில நிபந்தனைகளை பழனிச்சாமி அணி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் இன்று வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அதன்படி,
1.சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதோடு, அவர்கள் பதவி விலகியதற்கான ராஜினாமா கடிதத்தையும் பெற வேண்டும். அதனை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
2.சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
3. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
4. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் கட்சியின் பிரமாணப் பத்திரத்தில் சசிகலா பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை நீக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரத்தயார் என்று பன்னீர் அணியினர் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது என்றும், சசிகலா குடும்பத்திற்கு அந்த ஆதரவு இல்லை என்பதால் அவர்கள் தேர்தலில் நின்றால் நிச்சயம் தோல்வி தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.